அவரேதான் /ஜெ.பாஸ்கரன்

ஒல்லியான தேகம், சிறிது வளைந்தாற்போல முதுகு, தலையில் அடர்த்தி குறைவாக நரை முடி, கொஞ்சம் துக்கிக் கட்டிய வேட்டி, அரைக்கை சட்டை!

ஒன் வே ஜூபிளித் தெருவிலிருந்து, வலது பக்கம் தம்பையா ரெட்டித் தெருவில் திரும்பினேன். நூறடி தள்ளி வலது சாரியில் ‘வெங்கடேஸ்வரா போளி’ ஸ்டால். அதற்கெதிரில் சாலையோரக் கைவண்டிப் பழக்கடை. அதன் பக்கத்தில்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரேதான், எழுத்தாளர் அசோகமித்திரன்! (கடவுளைக் கதையில் கொண்டு வந்த புதுமைப்பித்தனும், புதுமைப் பித்தனைக் கதைக்குள் கொண்டு வந்த மாலனும் என்னை மன்னிப்பார்களாக!)

போளி ஸ்டால் வாசலில் இரண்டு மத்திம வயதுப் பெண்கள், அறுபது வயதுக்கு மேலிருக்கும் ரிடையர் ஆன அந்தக்கால மாமாக்கள், பேண்ட் சட்டையில் அலுவலகம் விட்டுச் செல்லும் வழியில் கொறிக்கும் ஊழியர்கள் எனச் சிலர் அன்றைய செய்தித்தாள் துண்டுகளில் வடை, உ.கி.போண்டா, மைசூர் போண்டா என வைத்துத் தின்றுகொண்டிருந்தார்கள்! மாலை மூன்று மணிக்கு மேல் சுறுசுறுப்பாக இருக்கும் மேற்கு மாம்பலம் அன்றும் அப்படியே…

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அவர் அருகில் சென்று, ‘வணக்கம் சார்’ என்றேன் புன்னகையுடன்.

மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தார். பார்வையில் வழக்கமான கூர்மை. சிரித்தாற்போல இருந்தது, நிச்சயமாகத் தெரியவில்லை.

‘நான் தான், டாக்டர் ‘…

‘டாக்டரா இருந்தாலும் ஒன் வேயில் வரக்கூடாது’ சுளீரென்று வந்து விழுந்த வார்த்தைகளில் வியந்துபோனேன்.

‘இவர் நம்மை எப்போது பார்த்தார்?’ நினைத்துக்கொண்டேன்.

‘நான் நடந்து வரும்போது கூட ஒன் வேயில் வரமாட்டேன். இப்பொ யாருமே டிராஃபிக் ரூல்ஸ் எல்லாம் பார்க்கிறது இல்லே’ என்றார். இப்போது உண்மையாகச் சிரித்தார்.
‘அதில்ல சார், ஒரு அவசரமான வேலை. அந்தப் பக்கமும் ‘நோ வே’ சைன் போர்டு இல்லே, சரின்னு வந்துட்டேன். தப்புதான்..’

‘தப்புங்கறதுக்காகச் சொல்லல. அது ரைட்டு இல்லேன்னு எனக்குப் பட்டுது. அந்தக் காலத்துல, வார் சமயங்களில் கூட ரூல்ஸ மதிக்கணும்னு ரொம்ப கெடுபிடி பண்ணுவா…. இப்ப எல்லாம் மாறிப்போச்சு’

உலகத்தர எழுத்தாளர், இவ்வளவு எளிமையா அரைக்கை சட்டை, நாலு முழ வேட்டி, ஜோல்னாப் பையுடன் சென்னையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. இது நமக்கே உரிய பாரம்பரியப் பண்பு என எண்ணிக்கொண்டேன்!

‘வாழைப்பழம் என்ன வெலைப்பா?’ கை நீட்டியபடி கேட்ட பெண்ணின் குரல் கேட்டு இருவரும் திரும்பினோம்..

‘கிலோ அம்பத்தஞ்சு ரூவாம்மா’ என்றார் பெரிய மீசையுடன் பழக்காரர்.

‘கிலோவா… சீப்பு, டஜன் கணக்குலேதான் வாங்கிப் பழக்கம். இப்போ எல்லாம் கிலோக் கணக்கு, தோலிக்கும் சேர்த்து எடை!’ என்றார் அந்தப் பெண். ‘ஒரு கிலோவுலெ எவ்ளோ பழம் நிக்கும்?’

பொறுமையிழந்த பழக்காரர், ‘யம்மா, ஒனக்கு எவ்ளோ பழம் வேணும்,அத்தச் சொல்லு’ என்றார்.

கவனித்துக்கொண்டிருந்த அசோகமித்திரன் சிரித்தார். ‘யூ கே வுல எல்லாம் இன்னும் கூட மெட்ரிக் சிஸ்டம் கிடையாது. பவுண்டு, மைல் கணக்குதான். நாமதான் மொதல்ல சிஸ்டத்தை மாத்திண்டு, நம்மலையும் புதுப்பிச்சிண்டே இருப்போம். புதுசு எல்லாத்தையும் கத்துக்கறது நம்ப கல்சரோட தனித்துவம்!’

‘உண்மைதான். இது மாதிரி ஒரு விஷயத்த நீங்க சிகந்திராபாத் ரயில் நிலையப் புத்தகக் கடை பத்திச் சொல்லும்போது, எழுதியிருப்பீங்க. பிரிட்டிஷ் நாணய விகிதம் (பி.ஜி.), ஹைதராபாத் கரன்சி (எச்.சி.) இரண்டுக்கும் மாறும் விகிதம் பற்றி. நெறைய பேருக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லே’

‘ஆமாம். அந்தக் கடையில, ஹைதராபாத் பணத்தை வாங்கிக் கொள்வார்கள். ஆனா, ஒரு ரூபாய் என்று அச்சிட்டிருந்தால், ஒரு ரூபாயுடன், பதினாறு பைசாவும் தர வேண்டும். ‘பிக்சர்கோயர்’ ஆங்கில பத்திரிகை வாங்கும்போது இப்படி, விகிதப் படி அதிகமாப் பைசா கொடுக்க வேண்டியதிருக்கும்’ என்றவர் முகத்தில் நினைவுகளின் நிழல்கள்.

கையில் சின்னக் கைக்குட்டை. அவ்வப்போது அதனால் மூக்கு, வாய் இரண்டையும் மூடிக்கொண்டு, சன்னமாக இருமுகிறார்.

‘இந்த டஸ்ட், பொல்யூஷனெல்லாம் எனக்கு ஒத்துக்கறதே இல்லெ..’வீசிங்’ வந்துடும். ஒரு காலத்துலே, இன்னும் சொல்லப்போனா, நீங்க பொறந்திருக்கக் கூட மாட்டேள், பழைய மாம்பலம்ன்னா கொசு, மாடுகள், சாணி, சாக்கடைன்னு ரொம்ப மோசமா இருக்கும். காலெ கீழ வெச்சு நடக்கவே முடியாது! இப்போ எல்லாம் மாறிடுத்து. தனித் தனி ஓட்டு வீடெல்லாம், பெரிய பெரிய ஃப்ளாட்டா ஆயிடுத்து. எல்லா வசதிகளோடயும், தன்னிறைவு பெற்ற சின்ன காலனியாட்டம் ஆயிடுத்து பழைய மாம்பலம். இப்பொ வெஸ்ட் மாம்பலம்! அந்தப் பக்கம் அசோக் நகர், கேகே நகர்ன்னு வளர,வளர இந்த இடத்தோட மவுசும் கூடிடுத்து!’

தூரத்தில், கொஞ்சம் உயரமான மனிதர், தோளில் ஒரு ஜோல்னா பையுடன் நடந்து வருகிறார். ‘விருட்சம்’ அழகிய சிங்கர்தான். அசோகமித்திரனின் முகம் மலர்கிறது.

‘வாங்கோ மெளலி. என்னாச்சு ஒங்க ஸ்கூட்டர்? ஏன் நடந்து வறீங்க?’

‘சாரி சார். ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கீங்களா? கிளம்பற நேரத்துல பார்த்தா, ஸ்கூட்டர் முன் வீல் பஞ்சர். நேரமாயிடுச்சேன்னு ஹெல்த் செண்டர் வழியா, குறுக்க நடந்தே வந்துட்டேன்’

‘பரவாயில்லெ… இவர் வந்தார் – அதுவும் ராங்க் சைடுலெ – பேசிண்டிருந்தோம்’

தன் ஜோல்னா பையிலிருந்து இரண்டு புத்தகங்கள், ‘அசோகமித்திரனும் நானும்’, எடுத்து அசோகமித்திரனிடம் கொடுத்தார் சிங்கர். அப்படியே எனக்கும் ஒரு காப்பி கொடுத்தார். விரைவாகப் புரட்டிப் பார்த்துவிட்டு, தன் ஜோல்னாவில் வைத்துக்கொண்டார் அ.மி.

‘மெளலி, எனக்குக் கொஞ்சம் ஸ்டேஷன் ரோடு வரைக்கும் போக வேண்டியிருக்கு. கூட வர முடியுமா?’

‘போகலாமே… வண்டிதான் இல்லே’

‘அது பரவாயில்லே. அப்படியே பேசிண்டே ண்டநடந்து போயிடலாம்’

என்னைப் பார்த்து, ‘உங்களுக்குப் பேஷண்டெல்லாம் காத்துண்டிருக்கப் போறா. எங்களோட ஏன் ஒங்க நேரத்த வீணாக்கறேள்?’ என்கிறார்.

‘சொல்லிட்டுதான் வந்திருக்கிறேன் சார். ஆறு மணிக்குதான் போகணும். ஒங்களைப் பார்த்ததே ரொம்ப சந்தோஷம்’

ஒரு பார்வையில், நான் சொன்னது சரியில்லை என்று அவர் நினைப்பது எனக்குப் புரிந்தது!

“யாருக்கு என்ன கஷ்டமோ.. நோயோட என்ன சிரமமோ.. நீங்கள்ளாம் ஒங்க நேரத்தை எங்களோட வேஸ்ட் பண்ணக்கூடாது” – வழக்கமான தன் புன்னகையை உதிர்த்தார். அவரது ‘வெள்ளை மரணங்கள்’ சிறுகதையில், சிப்பாய்கள் கல்லறையில், மருத்துவம் பார்க்காமல் சிப்பாய்கள் இறந்திருக்கக் கூடிய அவலத்தைக் குறிப்பிட்டிருப்பார் – நினைத்துக்கொண்டேன், இவரது எண்ணங்களே படைப்புகளாக வெளிவருகின்றன என்று!

அதற்குள் அவசரமாகச் சென்று, எதிரிலிருந்த வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலிலிருந்து மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தார் மெளலி.

அதைப் பார்த்து வியந்தார் அசோகமித்திரன். ‘அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு நல்ல மிளகாய் பஜ்ஜி குடுக்கறதுதான் ஆச்சரியம்! அதுலெ எவ்வளவு பேரோட உழைப்பு இருக்கு?’ என்றபடி, ஒரு பஜ்ஜியை வாங்கிக் கடித்தார். ‘காரமே இல்லாமெ, எவ்வளவு பெரிய மிளகாய்!’

‘மானசரோவர் நாவல்ல, வாழைக்காய் பஜ்ஜி போடறதப் பற்றி விரிவா எழுதியிருப்பீங்க. நீள வாக்குல தோல் சீவிய வாழைக்காய் பஜ்ஜி, பெரிய சட்டுவதுல எண்ணையிலிருந்து எடுத்து, சின்ன செய்தித் தாள் துண்டுல எண்ணைய உறிஞ்சி, டீ யோட சாப்பிடறத, சுவாரஸ்யமா எழுதியிருப்பீங்க. அப்படித்தான், ‘எலி’ சிறுகதையிலயும், ஒரு அரசியல் கூட்டத்துலெ வண்டியில மசால்வடை, பஜ்ஜி போடற ஆளைப் பற்றி எழுதியிருப்பீங்க’

சிரித்துவிட்டு, ‘அனுபவங்கள்தான் – பார்க்கறது, கேட்கறது எல்லாம்தான் – கதையாறது. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படிச்சாத்தான் அதுக்குள்ள இருக்கும் அனுபவம் புரியும்… ஆனாலும் எல்லாம் வெறும் கதைதானப்பா….’ என்று ஒதுங்கும் அசோகமித்திரனை சுவாரஸ்யமாகப் பார்த்தேன்!

அழகிய சிங்கரைப் பார்த்து, ‘ஃபேஸ் புக், வாரா வாரம் கதை, கவிதைன்னு சூம் மீட்டிங்குல பிஸியா இருக்கீங்களே, ஒங்க கதை, கட்டுரைகளை எழுத நேரம் எங்கே இருக்கும்?” எனக் கேட்கிறார்.

‘கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், கவிஞர்களையும், கதைஞர்களையும் கொண்டாடணும்னு தோணித்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கவிதைகளைப் பற்றி இலக்கிய நண்பர்களைப் பேச வைத்திருக்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சி. கதை, கவிதை சொல்ல ஒரு பிராக்டீஸ்!’

‘அந்தக் கால இலக்கியக் கூட்டங்கள் மாதிரி இப்பொ இல்லையோன்னு தோன்றது. மாசா மாசம் இலக்கியம், விவாதம், பரிசுன்னு இருக்கும்’

அமைதியாக அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். 2011 ல் வந்த அசோகமித்திரனின் ஒரு சிறுகதைத் தொகுப்பு. 15 மாதங்களில் எழுதிய சிறுகதைகள். கல்கி, ஆ.வி., குமுதம், உயிர்மை, ஓம்சக்தி, அமுதசுரபி, காலச்சுவடு, விஜயபாரதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த சிறுகதைகள். வழக்கத்தைவிட சிறிய அளவில், ஆனால் அதே அடர்த்தியுடன் சுவாரஸ்யமான சிறுகதைகள். வாசித்திருந்தேன். அதைப் பற்றி சொன்னபோது, ‘இந்தப் பத்திரிகைக்கு இப்படி, அந்தப் பத்திரிகைக்கு அப்படி என்றெல்லாம் எழுத மாட்டேன். என்னை பாதித்த சின்ன சின்ன விஷயங்கள், முரண்கள் என என் வழியில் நான் எழுதுவதுதான். நாம வளர்ந்து வந்த சூழலில் எழுதுவதுதானே கதைகள்? தெரியாததை எப்படி எழுத முடியும்?’ கேள்வியிலேயே பதிலைச் சொல்கிறார்.

கையில் சுருட்டி வைத்திருந்த அந்தப் பஜ்ஜிக் காகிதத்தை போடுவதற்கு, சுற்றும் முற்றும் பார்த்தார். ‘வர வர குப்பைத் தொட்டிகளைக் கூட காண முடிவதில்லை’ என்றவரிடமிருந்து அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டேன்.

‘உங்களுக்கு சிரமம். பாவம், நேரமே கிடைக்காது. சீக்கிரமா பார்த்துப் போங்கோ. யாருக்கு என்ன உடம்போ.. பாவம்..’ என்றபடி, சிங்கருடன் ஸ்டேஷன் ரோடு பக்கமாகத் திரும்பினார்.

எளிமையில் மூழ்கி, வண்டியில் நின்றுகொண்டிருந்தேன். பின்னால் ஹார்ன் சப்தம் கேட்க, சுய நினைவுக்கு வந்தவனாய்த் திரும்பிப் பார்த்தேன்…இரண்டு, மூன்று வண்டிகள் உறுமியபடி தயாராய் நின்றுகொண்டிருந்தன. வண்டியைக் கிளப்பினேன் – பக்கத்தில் பார்த்தேன். பழக்கடை அருகில் அசோகமித்திரனைக் காணவில்லை.

மனதில் பலரது கேள்வி – ‘நீ மருந்துச் சீட்டு எழுதுகிறவனா? கதை எழுதுகிறவனா?’ – குடைந்து கொண்டிருந்த போது, மானசீகமாக அசோகமித்திரன் வந்து போனார்.

“1945 ல் இப்படியெல்லாம் இருந்தது” தொகுப்பினை மீண்டும் வாசிக்க வேண்டும் என எண்ணியபடி, உறுமிய வண்டிகளுக்கு வழி விட்டு, மெதுவாக போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்தேன்!

2 Comments on “அவரேதான் /ஜெ.பாஸ்கரன்”

  1. மிகவும் அருமை டாக்டர்.

    அசோகமித்திரன் அவர்களது சிறுகதைகள் சேர்த்து வாசித்தது இல்லை. மிக மிகக் குறைவாகவே வாசித்துள்ளேன். உங்கள் எழுத்து அடடா, எடுத்து வாசிக்க வேண்டும் என்று உணர வைத்தது.

    வேணு

Comments are closed.