ஏற்றம்-இறக்கம்/மதுவந்தி

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை )

ஏற்றமும் இறக்கமும் நிரம்பிய
சாலையில் அறிந்தேதான் பயணம்.
முழங்காலில் வலியெடுக்க,
மூச்சிறைக்க, முதுகு வளைத்து ,
அழுத்திப் பெடல் மிதித்து,
ஏற்றம் ஏறுமுன்,
திரும்பிவிடலாம் எனத்தோன்றும்.
ஏற்றம் முடிந்த இறக்கத்தில்,
சைக்கிள் பறக்கையில்,
இறக்கையென கால்கள் நீட்டி,
காற்று முகத்தில் உரச,
உற்சாகமாய் இறங்கையில்,
ஓய்வெடுத்த கால்கள்.
மீண்டும் வலியோடு மிதிக்க
ஏற்றம் வரும்.
ஏற்றம் கொடியது,
இறக்கம் இனியது,
என்றாலும்,
சென்றபடியிருக்க
பயணம் இனிது .