
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )
நீ வீசிய பார்வை வலையில் சிக்கிக்கொண்டன
ஏராளமான மீன்களாய் என் காதல் சமிக்ஞைகள்
கனத்த அவ்வலையை மெதுவாய் இழு
உள்ளங்கள் உரசிப்போகும் அந்தக்காதலின்
பேரின்பக்கடலோரம் பெரும் இரைசலினூடே
மூச்சிழுத்தபடி சப்தமிடுகின்றன
சமிக்ஞைகளின் வலம்புரிசங்கு
வீசிய வலையை மெதுவாய்த்திற.
காமக் கிளிஞ்சல்களை ஒதுக்கி வை.
பிறகு கவிதையாக்கிக்கொள்ளலாம்
அங்கே கலகலத்து கிடக்கும் காதல்
சமுத்திரத்தின் உயிர்த்துளிகளுடன்
என் ஒற்றைப் பார்வை காதல் கசிவதை ஏந்து
ஏக்கத்திவளைகளை அகற்றி உன் உயிரின்
முத்தத்தை சுகமாய் ஒட்டியெடு.
வலையை தோளில் சுமந்து
சீக்கிரம் கரை சேர்.
உறங்கும் வேளை எப்படியோ
உன் கனவுகளுக்குள் நுழைய
காலியான
அவ்வலையை மீண்டும் வீச சிக்கிக்கொள்ளலாம்
காதல் பெருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மீன்களாய் என் காதல் சமிக்ஞைகள்.
