யாரந்த நிலவு?/சஞ்சயன்

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )

நிலவே
உன்னைச் சுட்டிக்காட்டி
என் தாய் எனக்குச்
சோறு ஊட்டிய போது
நீ என் சோற்றை
அபகரிக்க வந்தவன்
என்றே நினைத்தேன்..

பின்னொரு நாளில்
குளக்கரை இருளில்
கிராமத்துப் பாதையில் தாத்தாவின் முதுகில்
சவாரி குலுக்கலில்
நீயொரு கிலுகிலுப்பையாகத் தோன்றினாய் ..

இரவைக் கிழித்த
ரயில் பயணங்களில்
கூடவே ஓடிவரும் குழந்தையாகவும்..

மொட்டை மாடியில்
மல்லாக்க படுத்த
உறங்காத இரவுகளை
என்னோடு
பகிர்ந்து கொண்ட
ஒரே நண்பனாக..

மீசையும் காதலும்
அரும்பிய பருவத்தில்
என் அந்தரங்கத்
தூதுவனாக.. .

மாற்றலாகிப்
பேசுமொழியறியாத
வெளியூரில்
பணிபுரிந்தகாலை
அறிந்த ஒரே
சொந்த ஊர்க்காரனாய்..

எப்போதும்
இயங்கிக் கொண்டே
இருந்த நீ
இன்று நான் இயங்காது படுத்திருக்கும்போதும்
சாளரத்தின் வழியாக
என்னையே வெறித்துப் பார்த்தபடி..

மேகத்துகிலில்
கண்களைத் துடைத்தபடி..
ஒரு செவிலித் தாயாய்..

நிலவே
என் கடைசி உயிலின்
என் எண்ணப் புதையலின் கடவுச்சொல்லும் நீ..
உண்மையில் நீ யார்
எனக்கு என்ன சொந்தம்?