திரைப்படம்/முபீன் சாதிகா

அந்தத் திரைப்படம் பார்க்க வந்த பின்தான் அவள் வாழ்க்கையே மாறியது. அந்தப் படம் தொடங்கி அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஒரு திருப்புமுனைக் காட்சி தோன்றியது. ஒரு வாகனம் தலைகீழாகச் சறுக்கிச் சென்று கொண்டிருந்தது. அவள் அதை ஓட்டிக் கொண்டிருந்தாள். மலை முகடு வரும் போது கவிழ்ந்திருந்த வாகனத்தை நேராக்கி நிறுத்தினாள். வண்டியிலிருந்து இறங்கிப் பார்த்தாள். நெடும் பள்ளத்தாக்கு தென்பட்டது. அவளுக்கு உடலெல்லாம் நடுங்கியது. யாருமற்ற அந்த வனாந்தரத்தில் என்ன செய்வது என நினைத்து வண்டியில் அமர்ந்து வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தாள். படத்தின் அடுத்த காட்சித் தொடங்கியிருந்தது. அவள் ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தை ஒரு பெரிய ட்ரக் துரத்தி வந்துகொண்டிருந்தது. அதைக் கவனித்த அவள் இனி எந்த அபாயத்தையும் சகிக்க முடியாது என பயந்து போய் வண்டியை நிறுத்தி அதிலிருந்து இறங்கிவிட்டு வண்டியை ஓடச் செய்துவிட்டு காட்டுக்குள் மறைந்துகொண்டாள். வண்டி ஓடுவதைக் கண்ட அந்த ட்ரக் அதை மலை பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் விழும்படி இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டது. இந்தப் படத்தில் இப்படி மாட்டிக் கொண்ட பின் எப்படி மீள்வது என யோசித்தாள். தூரத்தில் மலையிலிருந்து உருட்டிவிட்ட அவளுடைய வண்டி எரிந்துகொண்டிருந்தது. சாலைக்குச் சென்று யாரிடமாவது உதவி கேட்கலாம் என ஓடி வந்து சாலை ஓரத்தில் நின்றாள். அப்போது தூரத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. இவள் உதவிக்காகக் கை அசைத்தாள். அருகில் வேகமாக வந்து நின்ற வண்டியில் இருந்த அவளது கணவன் எங்கெல்லாம் உன்னைத் தேடுவது எதற்காக அந்தத் திரைப்படத்திற்குள் சென்றாய் என அதட்டிவிட்டு வண்டியில் ஏறச் சொல்லி வேமாக ஓட்டினான். சிறிது தூரத்தில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஏதோ வாங்கச் சென்றான். அவன் சாவியை விட்டுச் சென்றதால் வண்டியை வேகமாகக் கிளப்பி வந்துவிட்டாள். பின்னால் அவன் கத்திக் கொண்டே சிறிது தூரம் வந்தான். திரைப்படத்திற்குள் தான் இருப்பது கூடத் தெரியாமல் அவன் அதட்டியது அவளுக்குப் பிடிக்கவில்லை. எத்தனையோ படங்களுக்குப் போய்த் திரைக்குள் நுழைந்து பல காட்சிகளில் இருந்துவிட்டு வந்திருக்கிறாள். இன்று அவள் கணவனுக்கு அது தெரிந்துவிட்டதால் இனி அவனுடன் வாழவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டுத் திரைப்படத்தின் வேறு காட்சிகளுக்குள் போனாள்.