
தினமும் தனக்கு விருப்பமானவளுக்காக ஒரு விநோதமான பூவைக் காட்டிலிருந்து பறித்து வந்து அவள் வீட்டு வாசலில் வைப்பான். அவள்தான் அதை எடுக்கிறாளா என்பது கூட அவன் பார்த்ததில்லை. யார் எடுத்தாலும் அந்தப் பூ அவளிடம் சென்று சேர்ந்துவிட்ட திருப்தியே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு நாள் வெகு நேரம் காத்திருந்து யார் அந்தப் பூவை எடுக்கிறார்கள் எனப் பார்த்தான். அவள் வெளியே வந்து அந்தப் பூவை எடுத்தப் போது அவனுக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அடுத்த நாள் அவன் பூவை வைக்கவில்லை. அவள் ஏமாற்றம் அடைகிறாளா எனப் பார்க்கக் காத்திருந்தான். அவள் வெளியே வந்து பூ இல்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்து வீட்டு வளாகத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு வருத்தத்துடன் உள்ளே சென்றுவிட்டாள். உடனடியாக அந்தக் காட்டுக்கு ஓடினான். அன்று அந்தப் பூ அந்தச் செடியில் மலரவில்லை. மிகவும் வருத்தமுற்று பூக்கள் விற்கும் அங்காடிக்குச் சென்று அந்த விநோதப் பூ எங்குக் கிடைக்கும் என்று விசாரித்து அறிந்தான். அங்கிருந்து வெகு தூரம் உள்ள ஒரு காட்டில் அது பூப்பதாக அறிந்து அங்குக் கிளம்பிச் சென்று பறித்துவந்தான். அவள் வீட்டு வாசலில் அந்தப் பூவை வைத்தான். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பூவை எடுத்துப் போவதைக் கண்டு மிகவும் திருப்தி அடைந்தான். அடுத்த நாள் அந்தப் பூவை அவள் வீட்டு வாசலில் வைப்பதற்கான காரணத்தைக் கூறி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி ஒரு கடிதத்தையும் வைத்தான். அவள் அந்தப் பூவையும் கடிதத்தையும் எடுத்துப் போனாள். அவன் காத்திருந்தான். அவள் வெளியே வரவில்லை. அடுத்த நாள் பூவை வைத்துவிட்டுக் காத்திருந்தான். அவள் வரவில்லை. அடுத்த நாள் பூவை வைக்கப் போன போது முந்தைய நாளின் பூ எடுக்கப்படாமல் அதற்கு அருகில் ஒரு கடிதம் இருந்தது. பூ வைப்பதாலேயே அவனை ஏற்க முடியாது எனவும் ஆனால் பூ மிகவும் பிடித்திருப்பதால் தினமும் அதை வைக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அவன் அமைதியாக நடந்தான். அடுத்த நாள் அவள் வீட்டு வாசலில் பூவை வைத்துவிட்டு அவள் தன்னை ஏற்காததால் தன் மனம் உடைந்துவிட்டதாகவும் இனி தொடர்ந்து பூ வைத்தால் துயரம் மட்டுமே மிஞ்சும் என்பதால் தான் இனி பூ வைக்கப் போவதில்லை எனவும் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வந்தான். அடுத்தநாள் காலையில் அவன் வீட்டுக் கதவைத் திறந்தான். அந்தப் பூ அவன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்தது.
