ஆல் இன் ஆல் அழகு/நாகேந்திர பாரதி


சரியாக அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்து விடும் அழகுக்கு. ஆறு மணிக்கு கடையைத் திறக்கா விட்டால் முதலாளியின் ஆபாச வசவுகளைக் கேட்க வேண்டியிருக்கும் . புறநகர்ப் பகுதியில் உள்ள அந்த மளிகைக் கடை முதலாளி ஆறுமுகத்திற்கு ஆல் இன் ஆல் அழகு தான். வாரச் சம்பளம். குடித்துக் குடித்துச் செத்துப்போன அப்பா. நோயாளி அம்மாவின் வைத்திய செலவுக்கும் , வீட்டுச் செலவுக்கும் போதுமான பணம் . தீபாவளி சமயம், புது துணிமணிகள், போனஸ் .

ஆனால், வேலை குருவி தலையில் வைத்த பனங்காய் போல கனக்கும், பதினைந்து வயது அழகுக்கு. பல வருடங்களாகப் பழகிப் போய்விட்டது .காலையில் ஆறு மணிக்குக் கேட்டை மேலே தூக்கிவிட்டு தாழ்ப்பாள் போட்டு விட்டு , பக்கெட் எடுத்துப்போய், அடி பைப்பில் தண்ணீர் அடித்து வந்து, கடைக்கு முன்னே தெளித்து பெருக்கி விட்டு, பல பெரிய சாக்கு, மளிகைச் சாமான் பைகளை , கடைக்கு முன்னே ஓரமாக பாதையை மறைக்காமல் எடுத்து வைத்துவிட்டு நிமிரும்போது ஆறுமுகம் வந்திருப்பார் .

சாமி படத்தின், பழைய மாலைகளை எடுத்துப் போட்டுவிட்டு, புது மாலை சாத்தி, சூடம் காட்டி விட்டு ,அவனுக்கும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக் காண்பித்துவிட்டு, கல்லாப் பெட்டிக்கு முன்னே போய் உட்கார்வார்.அடுத்து மதியம் சாப்பாட்டுக்குத் தான் எழுந்திருப்பார். நெரிசலான போக்குவரத்து பகுதியில் கடை உள்ளதால் கூட்டம் பின்னியெடுக்கும், தராசில் நிறுப்பது , பாக்கெட்டில் மடிப்பது, ஸ்டூல் போட்டு ஏறி மேலே இருந்து எடுப்பது, காசை வாங்கி முதலாளியிடம் கொடுப்பது, மீதி வாங்கி கஸ்டமர் இடம் கொடுப்பது, இல்லாத சாமானைப் பக்கத்து சந்துக் கடையில் போய் வாங்கி வந்து கொடுப்பது, வரும் புது சாமான்களை எடுத்து அடுக்கி வைப்பது, மதியம் வருவதே முதலாளி வீட்டுக்கு போக எந்திரிக்கும் போது தான் தெரியவரும்.

அரை மணி நேரத்தில் சாப்பாட்டை முடித்துவிட்டு திரும்பிவிடுவார் ஆறுமுகம். அதற்குள் இவன் கஸ்டமரையும் கவனித்துக்கொண்டு அம்மா கொடுத்த தூக்குச் சட்டி சாதத்தையும் காலி பண்ணிவிட வேண்டும். வரும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தால் தலையில் ஒரு குட்டு விழும் .கூடவே ‘ தின்னிப் பயலே, இன்னுமா கொட்டிக்கிறே ‘ .

இரண்டாம் ஆட்டம் சினிமா முடித்து வரும் வரை, கஸ்டமர்களுக்காக திறந்திருக்கும் கடை. கடைசியில் கேட்டை இறக்கி பூட்டும் பொழுது மணி இரவு இரண்டு மணி . நடுவில் ஆறுமுகம் இரண்டு முறை வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டு வந்து விடுவார் . இவனுக்கு வடை, காப்பி சாயந்திரம், ரெண்டு இட்லி , சட்னி இரவு ,கிடைக்கும். அதுவரைக்கும் வேலை தான். ‘இதுதான் வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் போல’ என்று பழகி விட்டது அவனுக்கு .

ஞாயிற்றுக்கிழமை மட்டும் மதியத்தோடு கடை மூடப்படும். அவனும் பக்கத்துச் சந்துக் கடை சேகரும் சேர்ந்து முதலில் போவது சாராயக்கடை . அதை முடித்து மேட்னி பார்த்துவிட்டு சாயந்தரம் வீடு திரும்பும்போது ஆட்டோவில் எங்கோ போகும் பெரியவர்களோடு சிரித்த முகங்களோடு செல்லும் பையன்களைப் பார்க்கும்போது கண்ணுக்குள் பொங்க, மறுபடியும் சாராயக் கடைக்குப் போவார்கள்.

One Comment on “ஆல் இன் ஆல் அழகு/நாகேந்திர பாரதி”

Comments are closed.