எஸ். சண்முகம் கவிதை

கண்முன்னே இருக்கும் பக்கத்தை வாசிக்கும் போதே
விரல்கள் நூறு பக்கங்களைக் கடந்து
நூற்றி நாலாவது பக்கத்தை திருப்புவிட்டது
அந்த பக்கத்தின் நடுபத்தியின்
இரு வரிகளிலேயே வாசிப்பு முழுமையாக
நின்றுவிட்டது

நினைவில் வைத்துக் கொள்ளாத
அந்த அயல்மொழி பெயரிலுள்ள
ஒரு துரித உணவகத்திலிருந்து வெளியேறிவிட்டேன்
எதையும் அருந்தவுமில்லை சாப்பிடவுமில்லை

அந்நேரம் அமர்ந்திருந்ததை மட்டும் உணர்ந்தேன்
சளிப்பின்றி என்ன வேண்டும் என்று கேட்டவரைத் தவிர
மற்றவர் எவருமே தென்படவில்லை எனக்கு

புத்தகத்தின் நூற்றி நாலாவது பக்கத்தை கடந்துவிட்டிருந்தேன்
அடுத்த பக்கம் தட்டுப்படவில்லை
வீட்டின் மரமேசையில் புத்தகமொன்று கவிழ்ந்துள்ளது

வீதியை அடைந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்
அந்த துரித உணவு விடுதியின் கண்ணாடிக் கதவுகளில்
மற்றவர்களின் பிம்பங்களுடன் விழுந்திருந்த
என் பிம்பத்தையும்
சுத்தம் செய்பவர் துடைத்தழித்துக் கொண்டிருந்தார்.