இலக்கிய இன்பம் 60 /கோவை எழிலன்


கரை பொருது இரங்கும் முந்நீர்

வணிகத்தில் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது பொருள் தேங்கக் கூடாது. அதே நேரம் பொருளுக்குத் தட்டுப்பாடும் வரக்கூடாது.

இதை அழகான உவமையுடன் விளக்குகிறது மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி. கடல் நீரை முகிலினங்கள் எவ்வளவுதான் முகந்தெடுத்தாலும் அக்கடல் நீர் அளவில் குறைவதில்லை. அது போலவே எவ்வளவுதான் விற்றாலும் மதுரை நாளங்காடியில் பொருள் குறைவதில்லை.

பல ஆறுகள் புதுப் புனலைக் கொண்டு வந்து சேர்த்தாலும் கடல் பொங்கி வழிவதில்லை. அவ்வாறே புதுப்பொருள்கள் வந்து கொண்டே இருந்தாலும் அவை நாளங்காடியில் தேங்குவதில்லை. பொருள் வருவதற்கும் விற்று விடுவதற்கும் சரியாக இருப்பதால் சுழற்சி நன்றாக இருந்து மதுரையில் வணிகம் செழிக்கிறது என்கிறது மதுரைக்காஞ்சியின் இந்த அடிகள்

மழை கொளக் குறையாது,
புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும்
முந்நீர் போல,
கொளக் கொளக் குறையாது,
தரத் தர மிகாது…………….
மாடம் பிறங்கிய
மலி புகழ்க் கூடல்
நாள் அங்காடி…..”