
எஸ் வி சேகர் – நாடகப்ரியா – 100 நிமிடங்களில் 200 சிரிப்புக்கு உத்தரவாதம்!
தனது மேடை நாடகங்களின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் திரு. எஸ் வி சேகரின் அன்பு அழைப்பை ஏற்று, இன்று மாலை டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அரங்கத்தில் ‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் பார்த்தேன். சுமார் 200 பேர் மட்டுமே அமரக்கூடிய சின்ன ஏசி அரங்கம்.
40 ஆண்டுகளுக்கு முன், மோகனை, ‘கிரேசி’ மோகனாக மாற்றிய நாடகம். பாலசந்தரின் ‘நாணல்’ படத்தில் இன்ஸ்பயர் ஆகி, எழுதப்பட்ட நகைச்சுவை நாடகம். எஸ் வி சேகரும் அவரது குழுவினரும், இரண்டேகால் மணி நேரம் இடைவிடாது சிரிக்க வைத்த இந்த நாடகத்தை அப்போதே பார்த்திருக்கிறேன். கலைவாணர் அரங்கில் என்று நினைக்கிறேன். இன்று மீண்டும் அதே நாடகம், மக்களின் ரசனைக்கேற்ப ஒன்றே முக்கால் மணி நேரத்திற்குக் குறைக்கப்பட்டு, நடத்தப் பட்டது. சுந்தா, மானேஜர் சீனா போன்ற நடிகர்கள் இல்லை – பல புதிய நடிகர்கள். இருந்தாலும், நாடகம் களை கட்டியது! அதே நகைச்சுவை சரவெடிகள் – எஸ் வி சேகர் அன்றும், இன்றும் தன் இயல்பு மாறாத நகைச்சுவை நடிப்பாலும், தன் குழுவைத் தயார் செய்திருப்பதிலும் நிலைத்து நிற்கிறார்! ஒரே வித்தியாசம், இன்று இடையில் வந்து விழும் அரசியல் பகடிகள்! மிகவும் இயற்கையாக, நாடக ஓட்டத்துடன் சேகர் அள்ளித் தெளிப்பது அபாரம். திரு சோ அவர்களுக்குப் பிறகு, நாடகத்தில் current politics சேர்த்துப் பேசுவது சேகருக்கு நன்றாக வருகிறது என்பது என் எண்ணம்.

கிரேசி மோகனின் வசனங்கள், இன்றும் சிரிப்பூட்டுகின்றன!
அறிவிக்கும்போது, இயக்கம் ‘சுந்தா, எஸ் வி சேகர்’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு சேகரைப் பாராட்டியே ஆக வேண்டும்!
பின்னணி இசையில், அன்றைய கெளபாய் படங்களின் டைட்டில் மியூசிக் சிறப்பு.
‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ புகழ் ஆதவன் தன் நண்பர்களுடன் வந்திருந்தார். மேடையில் எஸ் வி சேகரைக் கெளரவித்தார்.
அவரது மேடை நாடகங்கள், டிவி சீரியல்கள் (வண்ணக்கோலங்கள், நம் குடும்பம்) யூ டியூபிலும், ஆடியோ சிடிக்களாகவும் இன்றும் பலரால் கேட்கப்படுகின்றன.
நாடகங்களில் நடிக்க அவரிடம் விருப்பம் தெரிவிப்பவர்களிடம் அவர் சொல்வது: ‘மேடை நாடகம் என்பது விளையாட்டல்ல. சீரியஸ் விஷயம். முறையாகத் தொடர்ந்து பயிற்சியுடன், இடைவிடாது எல்லா மேடைக் காட்சிகளுக்கும் தவறாது வரவேண்டும்’.
Hats off to you S.Ve.Shekhar!
