பிரமிள் பற்றிய சில தகவல்கள்/கால சுப்பிரமணியம்

2020-ல் எழுதிய ஒரு பதிவின் மறுபிரசுரம்

இலங்கைத் திருக்கோண மலையில் பள்ளிப்பருவத்தில், சுமார் பதினாறு வயதிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிவிட்டார் பிரமிள் எனலாம். சில வருடங்களில் யாப்பிலக்கணமும் கற்றுத் தேர்ந்தார். யாழ் என்ற கையெழுத்துப் பத்திரிகையில் கதைகள், கட்டுரைகள், சித்திரங்களுடன் கவிதைகளும் எழுதினார், ஆரம்ப காலங்களில் ஓவியத்தில் தான் அவரது முழுநாட்டமும் இருந்தது என்றாலும் இலக்கியப் படைப்புகளிலும் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்.
தமிழகத்தின் சென்னையிலிருந்து முதல் சிறுபத்திரிகையான சி.சு. செல்லப்பாவின் எழுத்து என்ற ‘புதுமை இலக்கிய மாத ஏடு’ ஜனவரி 1959இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் இதழில், ‘எழுத்து என்ற சின்னப் பத்திரிகையை, முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஓர் இலக்கியப் பத்திரிகையை, இந்தப் பாமரப்பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சி தான். எழுத்து, இலக்கியக் கோட்பாடுகள், தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாகத் திறந்த கதவாகத்தான் இருக்கும்… இலக்கியத் தரமான எத்தகைய புதுச் சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்’ என்று அறிவிக்கப்பட்டது.
செல்லப்பாவின் உத்தேசத்தை மீறியே புதுக்கவிதை எழுத்து’வில் புதுமலர்ச்சி பெற்றது. முதலாண்டு வரை இப் புதுமுயற்சி பற்றி அவர் அதிகமாகக் கவனம் கொள்ளவில்லை. இரண்டாம் ஆண்டிலிருந்து தான் பிரமிள் எழுத்து’வில் எழுத ஆரம்பிக்கிறார். ‘புதுக்கவிதையின் முதல் வாசகரும் முதல் விமர்சகரும் அவர்தான்’ என்று செல்லப்பாவே குறிப்பிட்டுள்ளார். 1960 ஜனவரி இதழில் த.சி. ராமலிங்கம் என்ற பெயரில் அவரது நான் என்ற கவிதை பிரசுரம் பெற்றது. அது மரபுக் கவிதையாய் அமைந்திருந்தாலும் மாணிக்கவாசகரின் சிவபுராணம், காரைக்காலம்மையாரின் உன்மத்தப் பாடல்கள், பாரதியின் உக்கிரம் நிறைந்த கவிதைகள் ஆகியவற்றின் தாக்கம் கொண்டதுபோல், ஆனால் ஒரு புதிய விசாரக் குரலாக விளங்குவதைப் பார்க்கலாம். இன்று அதைப் படித்தாலும் அதன் மாயத்தை உணரமுடிகிறது.
எழுத்து பத்திரிகையில் தொடங்கி ஓராண்டு காலத்தில் புது மலர்ச்சி பெற்றிருந்த புதுக்கவிதையின் பாதிப்பையும் வடிவ மாற்றத்தையும், பிரமிள் எழுத ஆரம்பித்த சில மாதங்களில் வெளிவந்த ‘ஐந்து கவிதைகள்’ (டிசம்பர் 1961) என்ற கவிதைகளில் காணமுடிகிறது. இவைதான் படிமக் கவிதை என்ற ஒரு புதுமரபைத் தோற்றுவித்தன. கவிதையில் பிச்சமூர்த்தியின் உருவத்தை ஏற்ற பிரமிள், உள்ளடக் கத்தில் பாரதியின் உத்வேகத்தையும் புதுமைப்பித்தனின் உக்ரத்தை யும் தி.சோ.வேணுகோபாலனின் விசாரத்தையும் ஏற்றுத் தம் தொடக்க காலக் கவிதைகளில் அடையாளம் காட்டுகிறார். பாண்டித்தியத்தில் பாழ்பட்டுநின்ற தமிழ்க் கவிதைக்கு ஒரு நவீன தொனியையும் சரளத்தையும் கொடுத்த பாரதியின் பரம்பரை நீர்த்துப் போயிருந்தது. பிரமிளின் இக்கவிதைகள் தான் ஒரு இறுக்கத்தைக் கொண்டுவந்தன. இதற்கு முன்பு எழுந்த பிச்சமூர்த்தியின் கவிதைகளாகட்டும் எழுத்து பத்திரிகையில் எழுதப்பட்ட தி.சோ.வேணுகோபாலன், நகுலன், சி.மணி, பசுவய்யா கவிதைகளாகட்டும் நெகிழ்ச்சியான கட்டமைப்பில் தான் இருந்து வந்துள்ளதைக் கவனிக்கலாம். இதற்குப் பின் இவர்களது கவிதைகளிலும் இறுக்கம் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கமுடியும்.
கவிதையும் விமர்சனமும் சமநேரத்திலேயே இயங்கும் வகையில் பிரமிள் எழுதிவந்துள்ளார். கவிஞராகிய அவர், கவிதைப் படைப்பு களின் மிகச் சிறந்த விமர்சகராகவும் விளங்கியிருக்கிறார். எழுத்து, கொல்லிப் பாவை, லயம் ஆகிய பத்திரிகைகள் பிரமிளின் படைப்பு களைத் தீவிரமாக வெளியிட்டுள்ளன. பிற பத்திரிகைகளிலும் உதிரிகளாகப் பல படைப்புகள் பிரசுரம் பெற்றுள்ளன. எழுத்து காலக் கட்டுரைகளில் தான், கவிதை பற்றிய கட்டுரைகளை அதிகம் காண முடிகிறது. புதுக்கவிதை புதிய துறையாக மலர்ச்சி பெற்றதால், கவிதை பற்றிய பிரச்சனைகளை ஆரம்பத்தில் அக்கறையோடு எழுதியுள்ளார். பிற்காலத்தில் எழுதியவற்றுள், ‘வானமற்ற வெளி’, ‘கருக்களம்’ மற்றும் கவிதை நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் ஆகியவற்றில் கவிதை பற்றிய ஆழ்ந்த விமர்சனங்களைக் காணமுடிகிறது. எழுபதுகளில் பலருள்ளாக எழுந்த இலக்கியச் சர்ச்சைகளிலும் பிறகு தாமாகவே அவர் சிலரை விமர்சித்த, இனவாதக் குரல்களை இனங்காட்டிய பிரச்சனைக் கட்டுரைகளிலும் கவிதை பற்றிய கருத்துகள் மேலோங்கி உள்ளன.
படிமக் கவிஞர் என்று அழைக்கப்பட்டாலும் பிரமிள் எழுதிய படிமக் கவிதைகள் மிகச் சிலவே. பின்பு அவரது கவிதைகளில் கவிதைப் படிமங்கள்தான் அதிகம் தென்பட்டுள்ளன. உலக அளவிலும் படிம இலக்கணப்படி எழுதப்பட்ட படிமக் கவிதைகள் மிகக் குறைவுதான். இமேஜிஸ்ட் பொயட்ரி என்று பென்குவின் பதிப்பகம் ஒரு மெலிந்த தொகுப்பையே வெளியிட்டுள்ளதைப் பார்க்கலாம். ஆனால் படிமங் களைக் கவிதைகளில் மிடைந்தெழுதுவது மிகுந்தது. இன்று படிமங்க ளற்ற கவிதைகளை எழுதுவோம் என்று தொடங்கிய இயக்கங்களும் பிடிவாத எதிர்நிலையைத்தான் எடுத்து வருகின்றன.
பிரமிளின் ஆரம்பகால கவிதைகளில் இயற்கை பற்றிய விவரிப்பு களும் முதிரா இளமையின் தத்துவ விசாரங்களும்தான் நிறைந் துள்ளன. தேவார மூவர் கவிதைகளில் நாவுக்கரசர் பாடல்களில் உள்ள அநுபவ நெகிழ்வை இளமையான சம்பந்தர் பாடல்களில் காண முடியாது. இயற்கை வருணனைகள், தோற்ற விவரிப்புகள்தான் அதிகம் இருக்கும்.
எழுத்து கவிதைகளுக்குப் பின் வந்த கண்ணாடியுள்ளிருந்து கவிதை களில் பாலியல் படிமங்கள் மிடைவதைப் பார்க்கலாம். இவற்றுக்குப் பின்பான கைப்பிடியளவு கடல் கவிதைகளில் சமுதாயக் கூறுகள் இணைவதைக் காணலாம். மேல்நோக்கிய பயணம் கவிதை களில் தான் இவை அனைத்தும் ஒன்றிணைந்து கவிதைகளைப் பிறப்பித் துள்ளன. முன்னைய தத்துவ விசாரம் பின்பு ஆன்மீக விசாரமாக மாறுகிறது. தொடர்ந்து மெய்மைத் தேடலாக பிரமிளின் கவியுலகம் விரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமுள்ள தமிழ்க் கவிதையுலகில் பிரமிளின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவையாகப் பிறந்து தமிழ்க் கவிதைக்கு செழுமை சேர்த்துள்ளதை சி.சு. செல்லப்பா பாராட்டி யுள்ளார். கற்பனைக்குள் அடங்காதவற்றையும் அதீத உணர்வுகளை யும் கவிதைகளில் சிறை பிடித்த அதிசயிக்கத்தக்க கவி என்று அவர் பலராலும் புகழப்பட்டுள்ளார். பிரபஞ்சமும் பிண்டத் துகளும் இக்கணமும் காலாதீதமும் கற்பிதமும் மெய்மையும் சிருஷ்டியும் அழிவும் இயல்பும் உன்மத்தமும் சகஜமும் உக்ரமும் சரளமும் உத்வேகமும் கொண்டவை பிரமிள் கவிதைகள். பன்முக அர்த்தப் பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் இருண்மை நிறைந்ததாய் சாதாரண வாசகருக்குப் பிடிபடாததாய் சிக்கல் மிகுந்ததாய் ஜாலம் கொண்டதாய் அதிக கவனத்தை வேண்டுவதாய் அவரது கவிதைகள் கணிக்கப்படுகின்றன. புரியாவிட்டாலும் படிக்கத் தொடங்கினால் இறுதிவரை சப்த நயத்துடன் கொண்டு சேர்த்துவிடும் தன்மை இவற்றுக்கு உள்ளன. மௌனமும் இடைவெளிகளும் நிறைந்தவை இவை என்றும் சொல்லலாம்.
இக்கணத்தையும் காலாதீதத்தையும் அவரது வாழ்விலும் எழுத் திலும் காணலாம். அழகியல், ஆன்மீகம், சமூக, இனவாதக் கூறுகளை, அவரது கவிதை விமர்சனம் ஆழ்ந்து பரிசீலித்துள்ளது. உணர்ச்சிக் கவிதை, அறிவார்த்தக் கவிதை என்று பிரமிள் கவிதைகளைக் கூறு போட முடியாது. உணர்ச்சிகரமும் அறிவார்த்தமும் இணைந்த கவிதைகள் அவருடையவை. அதே போல் கிளாசிசிசமும் ரொமாண்டிசிசமும் கலந்தவை அவருடைய கவிதைகள். டி.ஏ. ஹூம் சொல்வதுபோல், செவ்வியலாக புனைவியலைத் தந்தவர் என்று கூட பிரமிளைக் கூறலாம். புறத் தர்க்கத்தை மீறியவை கவிதை என்றாலும், உள்ளோடும் கவித் தர்க்கம் பிரமிள் கவிதைகளில் பிசகாமல் இருக்கும்.
கண்ணாடிள்ளிருந்து கவிதைகளில் புதியவை பல தில்லியில் ஒரே மூச்சில் எழுதப்பட்டவை. அவருடைய சிறந்த கவிதைகள் அவற்றில் பல உண்டு. தொடந்து அவர் விமர்சனக் கவிதைகளையும் எழுதி யுள்ளார். பிற்காலத்தில் தம் கவிதைகள் புரியவில்லை என்று சொன்னவர்களுக்காகப் புரியும்படியான கவிதைகளை ஒரே அமர்வில் எழுதியுள்ளார். ஒரே அமர்வில் எழுதியுள்ளார். அவை அதிரடிக் கவிதைகள் அல்லது விமர்சனக் கவிதைகள் என்ற வகையைச் சார்ந்தவை தாம். இதேபோல் சரளமான தொனியில் மேல்நோக்கிய பயணம் என்ற காவியத்தையும் படைத்தார். என்றாலும் அது அவரது முக்கியமான நெடுங்கவிதை.
பிரமிளின் பாதிப்பை இன்று பல கவிஞர்களிடம் காணமுடியும். ஏன் தன் தலைமுறையையும் பின்வந்த தலைமுறையையும் அதிகம் பாதித்தவர் பிரமிள் என்றுகூட சொல்லமுடியும். ‘விடிவு’, ‘மின்னல்’, ‘காவியம்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’, ‘வண்ணத்துப்பூச்சியும் கடலும்’, ‘மண்டபம்’, ‘தெற்கு வாசல்’ போன்ற பல கவிதைகளை அவரது தனித்துவத்தைக் காட்டும் பிரதானக் கவிதைகள் எனலாம். (2020)