பா வெங்கடேசன்-ன் முனைப்பில் புரவி இலக்கியக் கூடுகை

பா வெங்கடேசன்-ன் முனைப்பில் புரவி இலக்கியக் கூடுகை ஓசூர் FA Academy-ல் நடந்தது. நல்ல இடமும் சூழலும். இது சுமார் ஒரு மாத திட்டமிடலுக்குப் பின் துவங்கிய முதல் கூடுகை. இதன் நோக்கம் மிக எளிய ஒன்றுதான். படைப்புகளை – இப்போதைக்கு நாவல்கள் – படித்துவிட்டு வந்து அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதல், பேசுதல், விவாதித்தல். இன்றைக்கு – நடப்பு நிலைமையில் – என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் பொருட்டும், அதை சிலாகிக்கும் பொருட்டும். இதன் உப விளைவாக புத்தகங்களை வாங்குதல். வாங்கிப் படித்தல்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார வைக்க மாட்டோம் என்ற உத்திரவாதத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்வு. முதல் நிகழ்வு என்பதால் 100% திட்டமிட்ட அளவில் எல்லாவற்றையும் பேசி முடிய இயலவில்லை என்றாலும் – நிறைவளித்த கூடுகை. (நிறைவளித்த என்ற வார்த்தை சம்பிரதாயத்துக்கு சொல்லப்பட்டதல்ல.)

வாசக செறிவும், வாசிப்பு நோக்கமும் கொண்டிருக்கும் கூடுகையில் அநாவசியங்களுக்கு இடம் இருக்காது. அப்படியே இருந்தது இந்த கூட்டம்.

தான் படித்தவற்றை தனக்கு பரிச்சயமான சிமிழுக்குள் அடைத்துவிடும் முனைப்புகளும், கேளிக்கைகளும், தனக்கு உவப்பு இல்லாதவற்றை துச்சப்படுத்தும் போக்கும், விவாதங்கள் என்ற பெயரில் பின்கை முறுக்கல்களும் அல்லது வெறும் சொரிதலும் (சரி.. இடையின ‘ ர ’- வே இருக்கட்டும்)- இவையே நவீன இலக்கிய சூழல் என்று கருதும் நெருப்புக்கோழித்தனமும் – இலக்கியத்தை அணுகுவதற்கான பெரும் தடைகள். (சொல்லப்போனால் எதை அணுகவும் பெரும் தடைகள் இவை). வயலினை வீணைபோலவோ, வீணையை வயலின் போலவோ வாசிக்க முடியாது என்பதை அறியும்போது இசையின் பாலபாடம் துவங்கும். .

பகிர்தலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் நாவல் சாரு வின் ‘நான்தான் ஔரங்கசேப். ஜீரோ டிகிரி வெளியீடு.

சுமார் இரண்டு மணி நேர பகிர்வுகள். சாருவை பிடிக்கும், சாருவை பிடிக்காது என்ற இருமைகளை விட்டு இந்த நாவலில் என்ன இருக்கிறது என்று தேடப்புகுந்த முனைப்புதான் இரண்டு மணி நேரம்.

இது வரலாறா? புனைவா ? இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? அது இதில் செயல்பட்டிருக்கிறதா?

ஆம் எனில் எப்படி செயல்பட்டிருக்கிறது ? இல்லை எனில் எப்படி செயல்படவில்லை ?

இது நவீன கதை சொல்லல் முறையா? அல்லது மிகப் பழைய வடிவம்தானா? எதை வைத்து அப்படி சொல்ல முடிகிறது ?

சமகாலத்தில் இதன் பங்களிப்பு என்னவாக இருக்கும்? எப்படி அப்படிச் சொல்ல முடிகிறது?

இன்றைய காலகட்டத்தில் இந்த நாவலின் இடம் என்ன? ஏன் ?

இந்த நாவலின் கட்டமைப்பு, அணுகுமுறை, தளம், தடம் என்ன? இன்றைக்கு அதற்கு ஏதேனும் பொருத்தப்பாடு உள்ளதா? எவ்வாறு அப்படி சொல்ல முடிகிறது ?

வரலாற்றுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புக் கண்ணிகள் என்ன? வரலாறு நமக்கு அறிமுகமாகும் வழிகள் எப்படி உள்ளன ? எப்படி இருக்கலாம் ? ஏன்?

வழக்கமான வரலாற்று புனைவு போலவோ, வழக்கமான நாவல் போலவோ இதை படிக்க முடியுமா? முடியாதா? அப்படி படிக்கலாமா? கூடாதா ? அதனால் எதை பெறுவோம் எதை தவற விடுவோம் ?

இந்த அளவில் மட்டுமே இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ள, பேசிக்கொள்ள முடிந்தது. இன்னும் சற்று நேரம் தொடரலாமா என்ற எதிர்பார்ப்புடன் ஆனால் நேரம் கருதி கறாராக முடித்துக் கொள்ளப்பட்ட நிகழ்வு.

One Comment on “பா வெங்கடேசன்-ன் முனைப்பில் புரவி இலக்கியக் கூடுகை”

  1. தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒரு மின்னியல் வருவது மிக்க மகிழ்ச்சி.

Comments are closed.