சிருஷ்டி/க நா சு

கண்களிலே ஒரு குறும்பு
இதழ்க்கடையிலே ஒரு அலட்சியம்
மனத்திலே ஒரு வேகம்
சொற்களிலே ஒரு அமைதி
செயல்களிலே ஒரு அவமதிப்பு
முத்திரைகளிலே ஒரு அயர்வு
நடையிலே ஒரு வேகம்

இப்படி ஒரு மனிதனைச் சிருஷ்டித்து
நடமாட விட்டேன்
அவனால் ஒரு ஐம்பது ஆண்டுகள்
தாக்குப் பிடிக்க முடியவில்லை

கண்களிலே ஒரு ஏக்கம்
மனத்திலே பேராசை
எல்லோருக்கும் நல்லவனாக
இருக்க ஒரு வேகம்
சொற்களிலே அர்த்தமற்ற
பதட்டம், செயல்களிலே
ஒரு வேகமின்மை
முத்திரைகளிலே ஒரு அழகு

இப்படி ஒருவனை நடமாடவிட்டேன்
அவன் முப்பதாண்டுகளில்
தீர்ந்து விட்டான்

அலுத்துப் போய்
கண்களிலே குருட்டுத்தனமும்
மனத்திலே ஒரு சிந்தனையில்லாமையுமாக
முத்திரைகளிலே முடிவு காட்டும் சக்தியும்
நடையிலே பெருமிதமும்
சொற்களிலே அடைமொழிகளுமாகப்
போக்கிலே ஒரு சாதாரணத்வமுமாக

ஒரு மனிதனை நடமாட விட்டேன்
அவன் எண்பது ஆண்டு உயிர் வாழ்ந்தான்
அதில் முப்பது ஆண்டுகள் அறிஞனாகவும்
இருபது ஆண்டு பேரறிஞனாகவும்
பதினைந்து ஆண்டுகள் மந்திரியாகவும்
நடமாடினான்.

(நாற்றங்கால் மே 1974)

One Comment on “சிருஷ்டி/க நா சு”

Comments are closed.