எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று/க்ருஷாங்கினி

இதுதானே பூரணம்?

நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…

‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக்குறியான நிலையில் போராட்டமான வாழ்க்கை. ஒரு நாள் க்ரீம் பிஸ்கெட் சாப்பிட வேண்டுமென ஆசை. அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி, தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அதை எடுத்துப் பார்த்த அம்மா ரொம்பவும் நெகிழ்ந்து போனார். அதுதான் என்னுடைய முதல் எழுத்து.

அம்மாவின் வழிகாட்டுதல்தான் என்னையும் இலக்கியத்துக்குள் இழுத்தது. சிறு வயதிலேயே வாழ்க்கையை, அதன் யதார்த்தத்தைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது. அம்மாவின் எழுத்துப் பாணியும் எனது எழுத்து வகையும் வேறு வேறு. ஆனாலும், உள்ளது உள்ளபடி எழுதுவதென்பது அம்மாவின் பாடம்தான்.

அம்மா மூன்றாம் தலைமுறையின் பிரச்னைகளைக்கூட எப்படி எடுத்துக் கொண்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். என் மகள் 3 வயது முதல் பரதக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தாள். அவள் திருமணமும் அதைத் துண்டிக்காததாக இருக்க வேண்டும் என எண்ணினோம். ‘பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல… நாட்டியம் தொடர வேண்டும்’ என்று ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம். நாட்டியம் ஆடுபவர் என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் வேறு வகையில் புரிந்து கொண்டவராக இருந்தனர் அந்த ஆணும், அவரைச் சார்ந்தவர்களும். மேலும், திருமணத்துக்கு ஏற்றவரல்லாத ஒரு ஆண் என்பதையும் நாங்கள் அறியாமல் திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து 10 நாட்களிலேயே இதில் ஏதோ சிக்கல் என்று எங்களுக்குப் புரிய வந்தது. அப்போது நாங்கள் அம்மாவின் எதிர்வீட்டில்தான் குடியிருந்தோம். 3 மாதங்கள் வரை இயல்பாகவே நடந்து கொண்டோம். எங்கள் மகளின் வேதனைகளுக்கு விவாகரத்து ஒன்றே வழியென தீர்மானம் செய்தோம். அம்மா, அண்ணன், அண்ணி என எல்லோரிடமும் சொன்னோம். அம்மா வயதானவர், எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயமும் பதற்றமும் இருந்தது. சொல்லி முடித்தவுடனேயே அம்மா, ‘எனக்கு முன்னமே சந்தேகம்தான். புதிதாக திருமணமான ஆணின் எந்தச் செயலும் அவனிடமில்லை. இந்த மாதிரி திருமணம் தேவையில்லை’ என்றார். அந்த ஆணைச் சேர்ந்தவர்களை தன் வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்கள், அம்மா வயதில் பெரியவர், அதனால் அவமானம் கருதி பேத்தியை தங்களுடன் அனுப்பி வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் பேசினார்கள். அம்மா அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ‘இப்படியொரு கல்யாணம் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது கல்யாணமும் இல்லை. என் பேத்திக்கு கையில் கலை இருக்கிறது. அதன் எதிர்காலம் பரந்து கிடக்கிறது. தயவுசெய்து எல்லோரும் எழுந்து வெளியே போங்கள். இது கனவு என்று நாங்கள் நினைக்கத் தொடங்கி வெகு காலம் ஆயாச்சு’ என்றார். அதிர்ந்து விட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர். ஆனாலும். சமுதாயமும் உறவுகளும் (அம்மாவைத் தவிர) எங்களுக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து என் மகளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததும், அதைப் பார்த்து அம்மா மகிழ்ந்து, நெகிழ்ந்ததும் தனிக்கதை. அப்போது அம்மாவுக்கு வயது 86!

என்ன சொன்னார்களோ, என்ன எழுதினார்களோ அப்படியே வாழ்ந்தவர் என் அம்மா. திருமணம் அவரவர் விருப்பம் சார்ந்தது என்பதில் மிகுந்த தெளிவு கொண்டவர். ‘பொருந்தாத போது கழட்டி எறிய வேண்டியதுதானே?’ என்பார். ‘காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி எறி… எப்பவோ மாட்டிண்டு கழட்டிப் போடற செருப்புக்கே இந்த சுதந்திரம்னா, எப்பவுமே கூட இருக்க வேண்டிய கல்யாணத்துல ஒட்டாம எப்படி இருக்கிறது?’ என்பார்.

100 வயது வரை என்னுடன் இருந்த என் அம்மா, இப்போதும் என்னுடனேயேதான் இருக்கிறார். இருப்பார். தன்னுடைய எழுத்துகள் அத்தனையையும் எனக்கு சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார். எழுத்துதான் எனக்கு அம்மா அன்றும் இன்றும் என்றும்…’’

தொகுப்பு: ஆர்.வைதேகி

முகநூலில் தகவல் : ஆர்.கந்தசாமி