நவீன தமிழகம்: மொழி,மதம்,அடையாளம்’ /சகதேவன்

’நவீன தமிழகம்: மொழி,மதம்,அடையாளம்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, 2021) புத்தகத்தில் முதலில் கவனத்தை ஈர்க்கும் கட்டுரை ந.முத்துமோகனின் ‘தெற்காசிய நாடுகளில் நவீன மத உருவாக்கங்களின் அரசியல்’ என்ற கட்டுரை மதம் பற்றிய நமது முன்முடிவுகளை மாற்றும் வல்லமை கொண்டது.. தத்துவவியலில் ஓரளவு பயிற்சி இருந்தாலொழிய முத்துமோகனின் எழுத்துக்களைப் புரிந்துகொள்வது கடினம்.. ஆனால் இந்தக் கட்டுரை எளிய வாசகர்களும் புரிந்துகொள்ளும்படி அமைந்திருக்கிறது…கத்தோலிக்கக் கிறித்தவம், சீர்திருத்தக் கிறித்தவம், காலனியாதிக்கம், வைதீக இந்து மதத்தின் பாரம்பரிய எதிர்ப்பு வடிவங்கள் என்பவை பற்றிய புதிய கோண அணுகுமுறைகள் என்பது மட்டுமல்லாமல் நாட்டார் இறையியலை, ஆன்மீகத்தை உட்படுத்தி இந்தியமதம் என்ற ஒரு கருத்தியலை எவ்வாறு மேற்கத்திய அறிஞர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் சொல்கிறார்.. நமது தேசீயவாதம் என்பது நமது சமூக அடித்தளத்திலிருந்து வேறுபட்டது என்று கூறி அதற்குக் காரணம் அது வைதீக மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் என்று கூறுகிறார்..தேசீயவாதம் என்பது வேறுபாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது..அது சனநாயகத்திற்கு எதிரானது..மொழிவழிப்பண்பாட்டினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதது.. எளிய நடையாக இருந்தாலும் ’அஜெண்டா’ என்ற ஆங்கிலச்சொல்லை ‘வேலைத்திட்டம்’ என்று மொழி பெயர்த்திருப்பது சரியாகப் படவில்லை.. ‘முன் திட்டம்’ என்பது சரியாக இருக்குமோ? ஆங்கிலத்தில் ‘கிரேட் ட்ரெடிஷன்’ என்பதை எந்த விமர்சனமும் இல்லாமல் ‘பெருமதம்’ என்று ஏற்றுக்கொண்டிருப்பதுவும் முத்துமோகனின் தன்னும ஆய்வுக்கு முரணாக இருக்கிறது…