குடை/ப.மதியழகன்

குடையின் உள்ளே
மழை எட்டிப் பார்த்தது
முதல்மழை வரும்வரை
குடைக்கு அஞ்ஞான வாசம்தான்
யாரும் சீந்துவாரின்றி
ஒட்டடை படிந்து
ஓர் மூலையின் கிடக்கும்
குடை ரிப்பேர் என்று
வருகின்றவனிடம் வாசலில்
நின்று கத்தச் சொல்லும்
கிழிசலை ஒட்டுப்போட்டால்
மழைக்காலத்தை ஓட்டலாம்
என்றாள் முதலாளியம்மா
ஐயா எப்பவும் போல்
தலையசைத்தார்
கும்மிருட்டு, இடி மின்னல்
உள்ளே குதூகலம்
காற்று வந்து கலைக்கும் வரை
பட்டன் குடை வந்த பிறகு
இது எதுக்கு இடத்தை
அடைத்துக் கொண்டு என்று
என்னைப் பரணில் போட்டார்கள்
கிழவிதான் ஆபத்துக்கு
உதவுமே என்று எடுத்து வைத்தாள்
அவளது போதாத காலம்
அடுத்த நாளே போய்ச் சேர்ந்தாள்
ஒருதுளி பட்டால் போதும்
நான் உயிர்த்தெழ
மழையில் நனைந்தால் தானே
அது குடை