“குடை”/சுரேஷ் ராஜகோபால்

மழை பெய்யும் காலங்களில்
பெரும்பாலும் “குடை”
எடுத்துச் சென்றதில்லை

குடை கொண்டு போனநாளில்
பெரும்பாலும் மழை
மறந்தும் பெய்வதில்லை
#
மழை பெய்யும் நேரம்
குடையில் மறைந்தேன்
பக்கத்து வீட்டம்மா
குடையில்லாமல் நனைத்து
தலை சிலிர்த்து
என்னைப் பார்த்தாள்..
#
வருடம் முழுவதும்
குடையிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது

மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது

தேடி எடுத்தால் அது
சிலந்தி வலையில் சிக்கியிருக்கும்
அதனுள்ளே கரப்பும் பல்லியும்
தெறித்து ஓடும்.
#
கையில் குடை இருந்தபோது
தலைமட்டும் நனையாமல்
வீறாப்புடன் நடந்து போனேன்.

சாலை ஓரம்
குடை இல்லாத பேர்வழிகள்
என்னை ஏக்கத்துடன்
பார்த்து நொந்தனர்.
குடை கொண்டு
கடைக்குப் போனேன் அதை
அங்கு மறந்து வந்தேன் .

மறந்த குடைக்குக்
கள்ளன் உடனே வருவான்
தேடும் போது கிடைக்கவில்லை

உடன் மழை வந்த போது
யாருக்காவது அது உதவுமே
மனது சமாதானம் சொன்னது..

எந்தை எந்நாளும்
மழைக்குக் குடை போவார்
கொண்டு போனாலும்
தொலைத்து வருவதே வேலை .

வீட்டில் சாடினோம்
அவர் விட்டதாகச் சொன்ன
இடத்தில் தேடினோம் பலனில்லை
“குடை வள்ளல்” பட்டத்துடன் சிரிக்கிறார்

#
#