இனிக்கும் தமிழ் – 149/டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம்

திருவையாறில்உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன,மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது…அந்த தென்றல் காற்றில் கரும்பு வயலில் கரும்புகள் லேசாக அங்கும் இங்கும் ஆடுவதைப் பார்க்கும் போது ஏதோ இந்த காற்றில் அவை சொக்கிப் போய் கண் மூடி தலை ஆட்டுவதைப் போல இருக்கிறது….

திருஞான சம்பந்தரின் பாடல்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

பொருள்

நின்று உலாவும் நெடு விசும்பு -நெடிய, உயர்ந்த மலை
நெருக்கி வரும் – நெருக்கி வரும் போது
புரம் மூன்றும் – அந்த மூன்று உலகங்களையும்
நீள் வாய் அம்பு – நீண்ட கூர்மையான அம்பு
சென்று உலாவும் படி -சென்று தைக்கும் படி
தொட்ட = (அம்பை) விட்ட
சிலையாளி -வில்லை கொண்ட
மலையாளி -கைலாய மலையில் வாழும் (சிவன்)
சேரும் கோவில் – சேரும் கோவில்
குன்று எல்லாம் – குன்றுகள் தோறும்
குயில் கூவக் – குயில்கள் கூவ
கொழும்பி – செழுமையான
ரசம் – தேன்
மலர் பாய்ந்து – மலர்களில் இருந்து பாய்ந்து
வாசம் மல்கும்- வாசம் வீசும்
தென்றலார்-தென்றல்
அடி வருடி – பாதம் வருடி
செழுங் கரும்பு – செம்மையான கரும்பு
கண் வளரும் = உறக்கம் கொள்ளும்
திருவையாறே – திருவையாறே