உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகள்தான். இதை ஜெர்மனிக்கு நான் சென்றிருந்தபோது நடந்த சம்பவத்தை வைத்து விளக்கினேன். ஜெர்மனிக்கு சென்றிருந்தபோது வுர்ஸ்பர்க் நகரிலிருந்து நான் இருந்த ஸ்டுட்கார்ட் நகருக்கு என்னைப் பார்க்க சாரா தன் குழந்தையோடும் கணவரோடும் வந்திருந்தார். சாராவும் நானும் பதினேழு வருட காலமாக நண்பர்கள். அவருடைய குழந்தைக்கு வயது ஒன்பதரை மாதங்கள். சாராவுக்கு என்னிடம் அவர் குழந்தையை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே என்னைப் பார்க்க வந்திருந்தார். நான் அவர் அப்படி விரும்பியதை மிக உயரிய விழுமியமாகக் கருதுகிறேன். சாரா என்னுடன் உரையாடிய முழு நேரமும் அவருடைய குழந்தையின் மொழிக்கு முந்திய ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வொரு பாவனைக்கும் என்ன அர்த்தம் என்று எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். மொழிக்கு முந்தைய சைகைகளையும் பாவனைகளையும் தாய் குழந்தையிடம் அறிவது போல எந்தக் கவிதையில் அர்த்தங்களை வாசகன் அறிகிறானோ அந்தக் கவிதையே கவிதை மொழியில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருகிறது என ஜூலியா கிறிஸ்தவா தன் “Revolutions in poetic language” புத்த்கத்தில் எழுதவில்லையா என்ன? அது உண்மையில் அதீத கள்ளமின்மையின் (innocence) திளைப்பில் (jouissance) ஆழ்ந்திருப்பது; அதுவே என் தேடலுமாகும். கள்ளமின்மை, அப்பாவித்தனம், மாசின்மை என்பவை முட்டாள்த்தனமோ குழந்தமையிடம் காணப்படும் பண்போ மட்டுமல்ல அது கவித்துவ மேன்மையில் உருத்திரளும் மிக உயர்ந்த அறிவு. இன்றைய இலக்கியங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் திரைப்படங்களும் தந்திரங்களை, வக்கிரங்களை, துரோகங்களை, அவற்றை எதிர்கொண்டு வெற்றி தோல்விகளில்உழலும் நாயக நாயகிகளை முன் வைக்கின்றன; எனக்கு அந்த லௌகீகம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். எனக்கு சாரா தன் குழந்தையைப் பற்றிப் பேசுகின்ற மணி நேரம் என் வாழ்நாளுக்கும் போதும். அம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மேலும் அமையுமென்றால் அவை என் வாழ்க்கையின் பெரும் பேறுகள். அவை கொடுக்கும் அனுபவத்தை நான் என் கவிதைகளில் திக்கித் திணறியேனும் எழுதி வாசகர்களுக்குக் கடத்திவிடுவேன். அவை போதும் எனக்கு.