நினைக்க நினைக்க இனிக்கும் /மீ. விசுவநாதன்

உலகம் முழுதும் கொண்டாடும் – அன்பு
ஒளியே தீபா வளியென்பேன்
பலரும் சேர்ந்து வாழ்வதற்கு – இந்தப்
பண்டி கைநல் வரமென்பேன்

ஏழை செல்வர் எல்லோரும் – மனத்
தீங்கை எரித்துப் பொழுதெல்லாம்
தோழ மையோ டிருப்பதற்கு – இறை
சொல்லித் தந்த வழியென்பேன்

காலை நான்கு மணிக்கெல்லாம் – தாய்
கனிவாய் எழுப்பும் குரல்கேட்கும்
ஓலை எரித்து அடுப்பினிலே – நீர்
கொதிக்க வைக்கும் ஒலிகேட்கும்

பூசை அறையின் முன்பாக – பல
புதிய உடைகள், பட்டாசும்
ஆசை யாக அவள்செய்த – சுவை
அல்வா மிக்சர் வைத்திருப்பாள்

பலகை ஒன்றில் எனையமர்த்தி – கை
பதிய எண்ணை தேய்த்திடுவாள்
நிலவு மறையும் முன்னாலே – சுடு
நீரில் குளிக்க அனுப்பிடுவாள்

கங்கா ஸ்நானம் செய்தாயா – என
களித்து நெற்றி நீறிடுவாள்
அங்கே இருக்கும் புத்தாடை – அதில்
அழகாய் மஞ்சள் தேய்த்திருப்பாள்

புதிய ஆடை அணிந்தவுடன் – சிறு
துளி”லே கியம்”என் வாய்தருவாள்
பதிந்த நல்ல பண்பெல்லாம் – அவள்
பார்த்து விளைந்த பயிரன்றோ

தாத்தா பாட்டி அப்பாவை – நான்
பணிந்து வணங்கி எழுந்தவுடன்
சேத்த ணைத்துக் கொண்டெனக்கு – தான்
செய்த இனிப்பை ஊட்டிடுவாள்

உருவிக் கொளுத்தி வீசியதும் – உடன்
ஓங்கி ஒலிக்கும் சரவெடிகள்
தெருவில் முழுதும் சந்தோஷம் – ஒளித்
தீபம் பூசி விளையாடும்

வெடிகள் போடும் நேரத்தில் – மின்னல்
வெட்டிக் கொண்டு மழைகொட்டும்
துடித்துப் போவேன் நானழுவேன் – அம்மா
துன்பம் அறிந்து துயர்துடைப்பாள்

இனிப்பும் கார வகைசிலவும் – தந்து
எல்லா நட்பு உறவுக்கும்
தனியே கொடுத்து வரச்சொல்வாள் – அக்கா
தம்பி சேர்ந்து கொடுத்திடுவோம்

அக்கா வுக்கும் அதுபோலே – என்
அம்மா கொஞ்சி அழகுசெய்வாள்
நிக்கா தவளின் அன்புமழை – அதில்
நிறைய நனைத்தேன் நோய்களில்லை

மனத்தில் ஏழ்மை கிடையாது – அதில்
வள்ளல் தன்மை தான்வேண்டும்
இனத்தில் எல்லாம் உறவுகளே – என
எடுத்துச் சொன்னோர் பெற்றோரே.

நரகா சுரனாம் “நானகந்தை” – தினம்
நம்மை நசுக்கி வதைக்கிறது
சரணா கதிநீ என்றவுடன் – இறை
சக்தி வென்று ஒளிர்கிறது
(23.10.2022 21.11 pm)