வெகு இயல்பாய்
புலர்ந்த காலை/கேள்விக்காரன்…

எந்த உந்துதலும்
இல்லை

மந்தமெனக் கூட
கூறலாம்.
எல்லா நாள் போல.
நாலாய் மடிந்து
கேட் சொருகலில்
தமிழ் ஆங்கில
நாளிதழ்கள்.
இன்றேனும்
நடுப்பக்க கட்டுரை
தலையங்கம்
வாசகர் கடிதம்
வாசிக்க வேண்டும் ‌.

முக்கியமாய்.
ஆங்கிலத்தில்
ஏனாம்?

பிறமொழி எழுத்துக்கள்
பொய் சுமப்பதில்லை
என்றோ ஒரு
மொழி வல்லான்
கூற்று.

இங்கு எல்லாம்
கற்றோன் சமைத்த
சாலை தானே?

வாடிக்கையான
உடல் பிணி பற்றிய
பற்றாத
நடையாளர் கூட்டம்

ஒருவருக்கொருவர்
முடுக்கிய பொறியாய்
வாழ்த்து பரிமாறல்
.
சாலை மட்டும் தான்
கொஞ்சம் மாற்றமாய்
எட்டு மணி
வெட்டவெளி சாலை.

நகரக் காக்கைகளுக்கு
எவர் தான்
விடுப்பு முன் தகவல்
தருவாரோ

வெகு உற்சாகமாய்
வட்டமடித்து
தலை மொட்டுக்கள்
தரை நட்டு
கூட்டமாய் கூடி
சிந்தல் சிதறல்
இரை உண்ணும்
பேரழகு..

வெகு தூரமிருந்து
டிவி காட்டும்
போர்க்கள குண்டு ஒலியாய்
சன்னமாய் ஒலிக்கும்
ஏதோ ஒரு தீபாவளி
வெடி..
கூடவே உர் விர்
என்ற காற்றின் சுரமும்
உயரப் போய்
வெடிக்கும் போல

மளிகை கடை தங்கை மாலா
கடைக்கு ஆஜர்

பக்கமாய் தம்பி
பரமேசும்

தத்தம் புத்தாடை
தர குண தகவல்
கேட்டு வாங்கும்
பாராட்டு.

பின் என்ன
டிவி துணிக் கடை
விளம்பர இளம் கன்னியர்
கூட்டம் கண்டு
கண் விரிக்கும்
பார்வையாளரை
எங்கு தேட
கோடி கொட்டி.
கண் அசத்தும்
வணிக உத்தி
அவருக்கேது

அப்படியே நடை
தொடர்ந்தால்
இல்ல முகப்பு
நந்தியா வட்டை
பூ அமர்ந்து
தேன் தேடும்
சிறகு நோகா
சோம்பேறி
வண்ணத்துப்பூச்சி
இரவெல்லாம்
மினுக்கிச் சோர்ந்து
கண்ணடைந்து கிடக்கும்
சீரியல் விளக்கு ஆர
பூட்டு தூக்க
பட்டாசுக் கடைகள்!
துணிக் கடைகள்

பண்டிகை நாளுக்கில்லை
புதுச் சூரியன்
புதுக் காலை
புத்தம் புது
பட்டாடை
பருத்தியாடை
பொன்னார
பகட்டு
ஆர்ப்பாட்டமெல்லாம்!

காட்சிப் பிழை
தோற்றமெல்லாம்
கண நேர
சாலை விளக்கு குறியீடே !

நிச்சயமாய்
நமதுள்ளக் கோயிலுறை
தெய்வம் கேட்கும்
சின்னதொரு சிக்கன
அகல் விளக்கு.

ஓதி தொழுதால்
ஓம் எனும் மானுடம்
உளமெல்லாம் நிறைந்து
உரக்க ஒலித்து
உய்வழி சுட்டும்.