
நூற்றாண்டைக் கடந்த தமிழ்ச் சிறுகதை காலத்திற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. கதைப் போக்கிலும் கதை சொல்லல் முறையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க முடிகிறது. அகச்சலனங்களை துல்லியமாக படம் பிடிக்கும் கதைகள் தொடர் கவனம் பெற்று வருகின்றன. புது களங்கள், புதுப்புது உத்திகள் எனத் தமிழ்ச் சிறுகதை நவீனத் தமிழ் வாழ்வின் சகல பரிணாமங்களையும் பதிவு செய்வதில் முன்னிற்கிறது.
தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் குட்டிக் கதைகள், விடுகதைகள், வேடிக்கைக் கதைகள், அறிவியல் புனைக்கதைகள் என பல்வேறு சிறுகதை வடிவங்கள் காணக்கிடைக்கின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வகையான கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழில் சின்னஞ்சிறுகதைகள் அல்லது குறுங்கதைகள் இப்போது பரவலான கவனத்தைப் பெற்று வருகின்றன. சமூக ஊடகங்களின் வளர்ச்சி குறுங்கதைகள் வாசக கவனம் பெறுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. 1992-ல் அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் தாமஸ் இத்தகைய கதைகளை ப்ளாஷ்பிக்ஷன் (திறீணீsலீ திவீநீtவீஷீஸீ) என அழைத்தார். (மின்னல் வெட்டியது போல் ஒரு சிறு நிகழ்வை வாசகர் மனதில் விதைப்பதால் இப்பெயர் பெற்றதாகக் கருதலாம். ) மைக்ரோ கதைகள், நிமிடக் கதைகள், பாக்கெட் அளவு கதைகள், புகை நீளக் கதைகள் (ஒரு சிகரெட்டை புகைக்கும் நேரத்தில் படித்து முடித்துவிட முடிவதால் இப்பெயர் பெற்றது) மற்றும் அஞ்சலட்டை கதைகள் என வேறுவேறு பெயர்கள் இக்கதைகளுக்கு உண்டு.
குறுங்கதைகளின் நீளத்தை அந்தந்த கதைகளில் கையாளப்படும் விஷயமே தீர்மானிக்கிறது. மிகமிகக் குறைவான சூழல் மற்றும் பாத்திர வருணனைக் கொண்ட இக்கதைகள் ஒரு சூழலை, ஒரு சிறு நிகழ்வை வாழ்வின் மிகச்சிறிய பகுதியை கனக்கச்சிதமாக காட்சிப்படுத்தி வாசகர்களை யோசிக்க வைக்கின்றன. கதையில் வரும் மனிதர்களுக்கிடையே நிகழும் உரையாடல் அல்லது உரையாடல் நிகழும் சூழலை மனதிற்கொண்டு கதை மாந்தர்களின் குணங்களை வாசகர்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டும். கதாப்பாத்திரங்கள் மனிதர்களாகவோ, விலங்குகளாகவோ ஏன் பொருட்களாகக் கூட இருக்கலாம்.
படைப்புப் பணியில் வாசகனையும் பங்கேற்பாளனாகக் கொள்ளும் இவ்வகை கதைகளின் முடிவு ஒரு வரியிலோ, ஒரு வார்த்தையிலோ மாறக்கூடும். எதிர்பாராத முடிவு வாசகர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை எற்படுத்துகிறது. சில நேரங்களில் ஒரு புதிர்போல வாசகனே முடிவை சிந்திக்கும்படி விடுவதும் உண்டு.
குறுங்கதைகளுக்கு ஏற்பும் மறுப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது. மரபார்ந்த சிறுகதை வாசிப்பாளர்கள் இத்தகைய கதைகளை கதைகளே அல்ல என வாதிடுகிறார்கள். மேலும் சிறுகதை வடிவத்தை குறுங்கதைகள் சிதைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். இன்னொருப்பக்கம் தொழில்நுட்ப யுகத்தின் அனைத்து சலனங்களையும் மையப்படுத்தும் இக்கதைகள் நவீன வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் குறுங்கதைகளுக்கான தளம் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. குறுங்கதைகளுக்கென தனி இணைய இதழ்களும், வலைப்பூக்களும் வந்த வண்ணம் உள்ளன. திறீணீsலீ திவீநீtவீஷீஸீ எனும் பெயரிலேயே ஒரு இதழ் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கதை வடிவிலான கதைகள், பாதி கதை, மீதி கவிதை, தேவதை கதைகள், தனிமொழிகள் வடிவிலான கதைகள், மற்றும் பஞ்சதந்திர கதை உத்திகளைக் கொண்ட கதைகள் எனப் பல்வேறு வகையிலான கதைகள் இணைய வெளியெங்கும் காணக்கிடைக்கின்றன. உரையாடல் வடிவிலான ஹார்வே ஸ்டேன்ப்ரோ-ன் னூபாவமன்னிப்பு கோரல்சு எனும் கதையை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம்.
‘என்னை ஆசீர்வதியுங்கள் பாதர், நான் பாவமிழைத்துவிட்டேன்’
‘கடைசியாக எப்போது பாவமன்னிப்பு கேட்டாய்?’
‘இரண்டு வருடங்களிருக்கும்’
‘என்ன பிரச்சினை?’
‘நான் ஒரு மனிதனுக்கு மரணம் சம்பவிக்க வேண்டுமென விரும்புகிறேன்’
‘இதுவரையிலும் உன் விருப்பம் நிறைவேறவில்லையா?’
‘இதுவரையிலும் இல்லை’
‘அந்த மனிதர் யார்?’
‘என் மனைவியோடு உறவு வைத்திருக்கிறான்’
பாதிரியாரின் முகம் வெளிறியது.
‘நான் உன்னை மன்னிக்கிறேன்’
என் முன்னால் இருந்த திரைவழியே அவரைச் சுட்டுக் கொன்றேன்.
(தமிழில் -கட்டுரையாசிரியர்)

ஒரு வழக்கமான பாவமன்னிப்பு கோரும் சூழலை நினைவூட்டியபடி தொடங்கும் கதை முடியும்போது ஒரு பேரதிர்வை உருவாக்கிவிடுகிறது. ‘பாதிரியாரின் முகம் வெளிறியது’ ஏன் என்பதைக் கூர்ந்து கவனித்தால் பாதிரியார் தான் குற்றவாளி என நமக்குப் புரிந்துவிடும். உலகப்புகழ்பெற்ற காஃப்காவின் ‘எலி’ கதையின் முடிவும் நம்மை சிந்திக்க வைக்கிறது. இப்படிப்பட்ட எதிர்பாராத அதிரடி முடிவுகளை குறுங்கதைகளின் குறிப்பிடத்தக்க அம்சமாக கருதலாம்.
சமகாலத் தமிழ்ச் சமுக ஊடகங்களிலும், வலைதளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் குறுங்கதைகள் / அஞ்சலட்டை கதைகள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. குறுகிய காலத்தில் வாசிக்க முடிவதால் படித்து முடித்தவுடன் பலருக்கு பகிரப்படுவதுமுண்டு. அதிக விருப்புக்குறிகள் கிடைக்கும் கதைகள் அதிக வாசகர்களை சென்றடைகின்றன. தமிழ் அச்சு ஊடகங்களும் இத்தகைய கதைகளை நிமிடக்கதைகள், நொடிக்கதைகள், மைக்ரோ கதைகள் என வேறுவேறு பெயர்களில் வெளியிட்டு வருகின்றன. ஒரே பக்கத்தில் ஓரிரு கதைகளை வெளியிடலாம் என்பதால் வார இதழ்களும், சிற்றிதழ்களும் குறுங்கதைகளை தொடர்ந்து வெளியிட ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் குறுங்கதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். தீவிர இதழ்களில் இடம் பெறும் இவ்வகைக் கதைகள் அதிக வாசக கவனம் பெறுவதால் இக்கதைகளுக்கு வருங்காலத்தில் தமிழ்ச் சிறுகதைக்கு நிகரான அங்கீகாரம் கிடைக்கும் என யூகிக்க இடமுண்டு. அழகியசிங்கர், பா. ராகவன், யுவன்சந்திரசேகர், பெருந்தேவி, முபின்சாதிகா போன்றோர் எழுதிவரும் குறுங்கதைகள் தீவிர வாசிப்பிற்கும் ஆழ்ந்த விவாதத்திற்குரியவை. இந்த பின்னணியில் அழகியசிங்கரின் னூஅஞ்சலட்டை கதைகள்சு தொகுப்பை வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.
‘நவீன விருட்சம்’ இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியரான அழகியசிங்கர் கவிதை, சிறுகதை, விமர்சனம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். புதியன விரும்பும் அவரது படைப்பு மனதின் சமீபத்திய விளைச்சல் அஞ்சல் அட்டை கதைகள் (குறுங்கதைகள் மற்றும் சொடுக்கு கதைகள் நீங்கலாக) எனும் 56 கதைகள் கொண்ட தொகுப்பு.
அழகிய சிங்கரின் கதைகள் காட்சிப்படுத்தும் உலகம் நம் அன்றாடங்களின் உலகம். பெரும்பாலான கதைகளில் நம் கால மனிதர்களின் அகங்களையும், முகங்களையும் ஒருசேர கவனப்படுத்துகிறார். கைவிடப்பட்ட மனிதர்களின் மீது நம்மை கவனம் குவிக்க வைத்து நம்மை நாமே வாசிக்கத் தூண்டுகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாலோ என்னவோ கொரோனா சம்பந்தப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ‘இந்தக் கதைகள் யாருக்கும் எந்த அறிவுரையும் கூறுவதற்கு எழுதப்பட்டதல்ல’ எனும் அழகியசிங்கரின் வார்த்தைகள் அறிவுரைகளை எதிர்பார்த்து கதைபடிப்போருக்கு இந்த கதைகளில் ஏதுமில்லை எனும் அறிவிப்பாக இருக்கிறது. மேலும் இக்கதைகள் வாழ்வின் சில கணங்களை முன்வைப்பதோடு நின்றுவிடுகின்றன. நீதிக்கதைகள் போல வாழ வழிகாட்டும் கருத்துக்களை பிரச்சாரமாக முன்னெடுக்கும் கதைகளல்ல இவை எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
கொரோனா எனும் நோய் உருவாக்கிய பேரச்சத்தின் காரணமாக மனிதர்கள் சக மனிதர்களை கைவிட்ட கொரோனா கால மன நிலையைப் பதிவு செய்கிறது முதல் கதை. ‘தெருவில் அனாதையாகக் கிடந்தான் குணசேகரன்’ எனத் தொடங்கும் கதை அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், அவன் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ஒரு அலுவலகப் பணியாளன் என்றும் கதை மூலம் அறியமுடிகிறது. கதையில் குறிப்பிடத் தகுந்த இடம் காக்கையும் அணிலும் ‘இது அநியாயம், மனிதர்கள் ஏன் மோசமாய் போய்விட்டார்கள்’ என பேசும் இடம் தான்.
கொரோனா காலத் தொடர் பிரச்சாரங்கள் மனிதர்களை மனிதர்கள் தொடுவதை தடுத்தன. ‘சமூக இடைவெளி’ மனிதர்களிடமிருந்து மனிதர்களை அந்நியப்படுத்தியது. ‘நாய் சத்தத்தைக் கேட்ட பெரியவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்வதாக கதை முடிகிறது. ‘போஸ்டல் காலனி இரண்டாவது தெரு’ கதையில் இரண்டாம் தெருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை போய் பார்க்கவேண்டுமென விரும்பும் ஒருவரின் பதைபதைப்பை வாசிப்பவரின் மனதிற்குக் கடத்துகிறது கதை.
‘தனிமைப்படுத்துதல்’ கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று என்றாலும் தனி மனிதர்கள் மனதில் பேரச்சம் விதைத்தது. எப்படியாவது பாதிக்கப்பட்டவரைப் பார்த்து விசாரிக்கலாம் என புறப்படுபவரை தடுப்பு தடுத்துவிட்டது. ‘ஆள் நடமாட்டமில்லாத தெரு, போக முடியாதபடி தடுப்பு’ என கதை முடியும் போது கொரோனா கால ஊரடங்கு காட்சி மனதில் வந்து வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவரைப் பார்க்க முடியாமலேயே திரும்ப நேரிட்டவரின் மன அவஸ்தை எப்படி இருக்குமென சிந்திக்கத் தோன்றுகிறது.
கொரோனா காலத்தில் தான் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பலர் எச்சரிக்கையாக இருந்தார்கள். சிலர் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ / ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தில் தவிர்த்தார்கள். ‘ஓட்டம்’ கொரோனா பற்றிய அச்சத்தினை பத்மநாபன் மூலம் நம்முன் நிறுத்துகிறது. சுகாதாரத் துறையிலிருந்து இரத்த மாதிரி சேகரிக்க வந்தவர்களை ஒருமணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு அவர்கள் திரும்பி வருவதற்குள் ஓட்டம் பிடிக்கிறார் பத்மநாபன். பத்மநாபன் ஒரு உதாரணம் மட்டுமே. எத்தனையோ பத்மநாபன்கள் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். னூஅம்மா. . . . அம்மா…சு கதையில் கொரோனா பற்றிய அச்சம் நேரடியாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘இந்த கொரோனாவால் நானும் என் கணவரும் வீட்டில் அடைபட்டிருக்கிறோம், அவருக்கு வீடே அலுவலகமாகிவிட்டது எனக்கு அப்படியில்லை, முழுக்க முழுக்க தொலைக்காட்சி . . . . . ..’ காலையிலிருந்து இரவு வரை அம்மாவை பார்த்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் முதல்மாடியில் இருக்கிறோம். கொரோனாவால் கதவைத் தொடக்கூடப் பயம். செய்தித்தாளால் பரவிவிடும் என்பதால் செய்தித்தாளே வாங்குவதில்லை. அவர் தான் முகமூடி அணிந்து கொண்டு மளிகைச் சாமான்கள், மருந்தெல்லாம் வாங்கி வருவார்’
கொரோனா பற்றி அம்மாவிடம் விவரிக்கும் மகளின் கேள்விக்கு அம்மாவின் பதில் கேள்வியோடு கதை முடிகிறது.
‘அம்மா, கொரோனா தெரியுமா?’
‘யாராவது வாசலில் நிற்கிறார்களா?’
என்றாள் அம்மா.
கொரோனா மனிதர்களின் உளவியலை, நடவடிக்கைகளை மாற்றிவிட்டது. எதிர்மறை சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. அதீத எச்சரிக்கை உணர்வும், அதீத பயமும் மனிதர்களைப் பாடாய்படுத்தியது. பலருடைய மனம் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. ‘கேட்’ கதையில் வரும் கோபாலனுக்கு எப்போதும் யாரோ கேட்டைத் திறப்பது போல் தோன்றுகிறது. திறந்து கிடக்கும் கேட்டை அச்சத்துடன் பூட்டிவிட்டு வருவார். இப்படியிருந்தவர் ஒருநாள் கேட் பக்கத்திலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துவிட்டார் என நகரும் கதை ‘அப்புறம் தான் தெரிந்தது, யாரும் அந்த அடுக்ககத்திற்கு வரவும் இல்லை, போகவும் இல்லை’ என முடிகிறது.
கொரோனா கதைகளைப் போலவே பிற கதைகளிலும் தனிமனித நடவடிக்கைகள் எப்படி ஒரு சமூகத்தின் சமகால சாட்சியாக இருக்க முடியும் என்பதை நம்முன் வைக்கிறார் அழகியசிங்கர். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தாள் ரம்யா, எனத் தொடங்கும் கதையில் தகாத உறவின் மூலம் கர்ப்பமடைகிறாள் ரம்யா. தற்கொலை செய்தால் அந்த கருவிற்குக் காரணமானவரின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுமென்று தவிர்க்கிறாள். தன்னைத் தானே நொந்தபடி வீடு திரும்பும் அவளுக்கும் அவள் அம்மாவுக்குமான உரையாடலோடு கதை இப்படி முடிகிறது.
‘எங்கே போனே?’
‘ஆஸ்பத்திரிக்கு’
‘ஆஸ்பத்திரிக்கா’
‘ஆமாம்’
‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்றாள் ரம்யா.
சிறப்பாக எழுதப்பட்ட இக்கதையில் கதைக்குத் தேவையில்லாத கூடுதல் தகவல் ஏதுமில்லை. நம் கால பிரதியான ரம்யாவின் தோற்றம் பற்றிய வருணனையோ, வேறு விபரங்களோ கொடுக்கப்படவில்லை. கதையின் முடிவில் இடம் பெறும் இயல்பாகத் தொனிக்கும் உரையாடல் மூலம் ரம்யா தன்நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்பதால் பிரச்சினையை இயல்பாக எதிர்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ரம்யாவின் தாயின் எதிர்வினை வாசகர்களின் சிந்தனைக்கு விடப்படுகிறது.
மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சியைச் சுட்டும் கதைகள் மூலம் கால மாற்றத்தால் ஏற்படும் காட்சி மாற்றங்களை வாசகர் முன் படைத்துக்காட்டுவதில் அழகியசிங்கரின் எழுத்தின் வலிமை புலப்படுகிறது. புறக்கணிப்பையும், அலட்சியத்தையும் ஒருசேர சுமக்க நேரும் முதியவர்களின் சித்திரத்தை மாதவன் மூலம் நம் கண்முன் காட்சிப்படுத்துகிறார் அழகியசிங்கர். ‘பேசுவதற்கு யாராவது வாருங்கள் என்று உரக்க சத்தம் போட்டு சொல்லலாமென்று நினைத்தான்’ எனும் வரி யாருமற்ற தனிமையை மாதவனின் குரல்மூலம் பதிவு செய்கிறது. தன் தந்தையும் கூட இப்படிப்பட்ட தனிமையை எதிர்கொண்டார் என எண்ணும் மாதவன் ‘பாவம் அப்பா’ என சத்தமிட்டுச் சொல்வதிலிருந்து இந்த தனிமை தலைமுறை இடைவெளியின்றி தொடர்வது உறுதியாகிறது. அவர் மனைவி கூட அவர் இருப்பை அலட்சியம் செய்யும் மனநிலைக்கு வருவது நிகழ்கால அவலங்களின் உச்சம் என எண்ணத் தோன்றுகிறது.
யாரும் யாருக்காகவும் இல்லை எனும் நவீன கால யதார்த்தம் தனிமனித உறவு பற்றிய நமது மீள்பார்வையைக் கோருகிறது. அன்றாட செய்திகளில் அடிபடும் பிரச்சினையை ‘பிணக்கு’ கதை பேசுகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் சண்டையின் காரணமாக மனைவி தன்னைக் கொன்றுவிடுவாளோ என அச்சத்திற்குள்ளாகும் கணவன் வீட்டுக்கு வருவதை தவிர்க்கிறான்; அவன் ஒரு பொருட்டே இல்லையென நினைக்கும் மனைவியின் அலட்சியம் அவர்களின் உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசலைக் கோடிட்டுக் காட்டப் போதுமான ஆதாரங்கள். ஒரு நாள் பார்ப்பதற்கே அச்சம் விளைவிக்கும் தோற்றத்தில் இருக்கும் அவள், காதலனோடு அவள் வரக்கண்டதும் நிரந்தரமாக வீட்டைவிட்டு வெளியேறுகிறான் கணவன் என கதை நகரும் போதும் அவள் கணவன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என ஊரார் பேசுவதாக கதை முடிவுறும்போதும் கதையில் வரும் கணவன் மீது வாசகர் கவனம் விழும்படி எழுதப்பட்டிருக்கிறது. எதிர்ப்பு உணர்வு அற்றவனாக, அஞ்சி நடுங்குபவனாக ஓடும் அவனைப் பற்றிய சித்திரம் ஊராரின் யூகத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
அழகியசிங்கரின் அஞ்சலட்டை கதைகளில் பல அவரது கூர்ந்த நோக்கிற்கு எடுத்துக்காட்டாக இருப்பவை. ‘அலங்காரம்’ கதையில் ஒருவரது அன்றாடம் துல்லியமாகத் தெரிகிறது. மிகக் குறைந்த வார்த்தைகளில் எழுதப்பட்ட இந்தக் கதையில் ஒரு பெண் தன்னை ஒப்பனை செய்வதை விவரித்துவிட்டு ‘இதோ சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்’ என அதிரடியாக முடிக்கிறார். இப்படிப்பட்ட எதிர்பாராத முடிவுகளை அஞ்சலட்டை கதைகளின் தனித்தன்மையாகக் கொள்ளலாம். கடைசி வரி அல்லது வார்த்தை ஒரு திருப்பத்தை உருவாக்கும். இந்தக் கதையை முதலில் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் அவள் ஏதோ அலுவலகத்திற்கு அல்லது ஏதோ வேலையாக வீட்டைவிட்டு வெளியே போகப் போகிறாள் எனும் எண்ணத்தை உருவாக்கிவிட்டு அவள் சீரியல் பார்க்கத் தொடங்கிவிட்டதாக முடிப்பது பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. சீரியல் பார்க்கும் பெண்களின் ஒரு பிரதியாக அவளைக் கருதலாம். அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு சீரியல் பார்ப்பது ஒரு அனிச்சை செயலாக மாறிவிட்டதாகவும் கருதலாம்.
மனித மனம் அடிக்கடி மாறிவிடுகிறது. சற்று நேரத்திற்கு முன் எடுத்த முடிவை நொடிப்பொழுதில் மாற்றிவிடுகிறார்கள். மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் கதைகளில் ஒன்று ‘கேட்டுவிட வேண்டும்’. தன்னைப் பிடித்திருக்கிறதா என சௌம்யாவிடம் கேட்க வேண்டும் என முடிவெடுத்தவன் காலம், சூழல் எல்லாம் வாய்த்தும் கேட்கவே இல்லை. அவளிடம் ஒரு மணிநேரம் பேசியும் கேட்கவே இல்லை. கேட்டு மறுத்தால் அந்த மறுப்பை மனம் ஏற்க மறுக்கும் என்பதால் இருக்கலாம் அல்லது பிறகு கேட்டுக்கொள்ளலாம் என நினைத்திருக்கலாம் என நாமே ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
அழகியசிங்கரின் அஞ்சலட்டை கதைகளில் நாம் சந்திக்க நேரும் அன்றாட மனிதர்களும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் குவிமையமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இவை தவிர சுய அனுபவக் கதைகள் (இலக்கியக் கூட்டம், எல்லாம் சரி, பத்திரிக்கை ஆசிரியர் உள்ளிட்ட கதைகள்) தத்துவக் கதைகள் (ஏன் இப்படி) பேய்க்கதைகள் என எல்லா வகை கதைகளிலும் தன்னுடைய நீரோட்டம் போன்ற இயல்பான நடையில் மனிதர்களின் அக உலகைத் திறந்து வைக்கிறார். மனிதர்களின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அவஸ்தைகள் என அனைத்தையும் தன் கதைகளின் மூலம் கவனப்படுத்துகிறார். அஞ்சலட்டை கதைகளில் வரும் பெரும்பாலான மனிதர்களின் நடவடிக்கைகள் நம் அன்றாடங்களை நினைவூட்டுகின்றன. நாம் கதைகளில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் நம்மை நாமே வாசிக்க வைக்கிறார் அழகியசிங்கர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
(அஞ்சலட்டை கதைகள் – அழகியசிங்கர் – ருட்சம் வெளியீடு
சீத்தாலட்சுமி அப்பார்ட்மெண்ட்ஸ், புதிய எண் 16, பழைய எண் 7,
ராகவன் காலனி, மேற்கு மாம்பலம்.சென்னை – 600 033.பக்கங்கள் : 102
விலை : Rs.70/- தொடர்பு எண் : 9444113205 / 9176613205)
athangoduanish@rediffmail.com
