
எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா
தெருநாயா, ஜாதி நாயா, வளர்ப்பு நாயா
என்று அதன் குரலிலிருந்து என்னால்
அனுமானிக்க முடியாது. நாய் குலைக்கிறது.
எங்கேயோ, எவன் உள்ளத்திலோ
எழுந்த ஒரு சிந்தனை எப்படியோ
என்னை எட்டி என்னைப் பாதிக்கிறது.
அவன் எப்படி, என்ன என்று எனக்குத்
தெரியாது. கறுப்பனா, சிவப்பனா, வெளுப்பனா,
என்னைப் போன்ற ஒருவனா
என்றும் எனக்குத் தெரியாது.
அவன் வலமானவனா, இடமானவனா
நடுவனா, பேராசிரியனா, கதாநாயகனா
என்று எனக்குத் தெரியாது.
உலகத்தின் குரல்கள் என்னை
எட்டுகின்றன, தொடுகின்றன, தவிக்க விடுகின்றன
உலகத்தின் சிந்தனைகள்
என்னைப் பாதிக்கின்றன
நடந்ததும் நடக்காததும்
நினைத்ததும் செய்யாததும்
என்னை எப்படியோ பாதிக்கின்றன
ஏன் என்று என்னைக் கேட்டும்
பயனில்லை. எனக்கே தெரியாது.
என்னைக் கேட்டுப் பயனில்லை.
ஆழ்ந்த உறக்கம் கெட்டு
நள்ளிரவில் காதில் விழுந்த
நாயின் குலைப்பைக் கருத்தில் வாங்கி
ஏன் என்ன எது என்று
அவஸ்தைப் படுகிறேன்.
இதுவா என் சுதந்திரம்?
இதுவா என் ஆஸ்தி? இதுவா என் நிலைமை?
எனக்குத் தெரியவில்லை.
தெரியவில்லை என்றும் ஏற்றுக் கொள்கிறேன்
ஆனாலும் தெரியாதிருப்பது போதாது
குற்றம் எதுவும் புரியாதாயினும்
குற்றவாளிதான் என்கிறார்கள்.
மனிதனாகப் பிறந்ததே குற்றம் தானோ?
நாயாய்ப் பிறந்திருந்தால் குலைத்திருக்கலாம்
ஆடாய்ப் பிறந்திருந்தால்
கடித்துத் தின்றிருப்பார்கள்.
பேயாய்ப் பிறந்திருந்தால் யாரையாவது
பிடித்துக் கொண்டிருக்கலாம்.
சேயாய்ப் பிறக்கு முன் தாயின்
கர்ப்பத்தில் சௌக்கியமாய் இருந்திருக்கலாம்
பிறந்துவிட்டால் நானும் ஒரு புள்ளி
ஆகிவிடுகிறேன். எத்தனை புள்ளி
சேர்ந்தால் ஒரு கோடாகும் என்று
எந்த யூக்ளிட் சொல்லப் போகிறானோ தெரியாது.
தெரிந்து கொள்ள முயன்றாலும்
தப்பு. தெரியாமலே இருந்து விட்டாலும்
தப்பு. தெரிந்தவர்களை அண்டினாலும்
தப்பு. தெரிந்தவர்களை நினைத்தாலும்
தப்பு. ஆ ஹிட்லரை மட்டும்
கொடுங்கோலன் என்கிறார்கள்.
நாயேனை என்று பாடிய மாணிக்க
வாசகனைப் பக்தன் என்கிறார்கள்
என்ன செய்ய? நாயாய் ஓடுகிறேன்.
நடுவீதியிலே, நாயாய்க் குலைக்கிறேன்.
நடுவீதியிலே, நாயாய் அலைகிறேன்
பிழைப்பு எனும் எச்சிக்கலைத் தேடி
நான் கறுப்பா, சிவப்பா, தெருநாயா
பணக்காரவீட்டு நாயா என்று
வலதா, இடதா, நடுவா என்று
உங்களில் யாருக்காவது தெரியுமானால்
சொல்லுங்களேன். சொல்லிக்
குலையுங்களேன். நள்ளிரவில்
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்துக்
கவனித்துக் கேட்டுப் பார்க்கிறேன்.
2.
தெருக்களிலே நடக்கும்போது
எதிர்ப்படுகிற மனிதர்களின் முகங்களைக்
கவனித்துப் பார்க்கிறேன். எல்லோருக்கும்
அநேகமாக எல்லோருக்கும்
ரெண்டு கண்கள் ரெண்டு காதுகள்
ரெண்டு கால்கள் முதலியன இருக்கின்றன.
எனினும் அவர்களில் ஒருவரும்
என்னைப்போல இல்லை
ஒருவரும் உலகத்தின் சுமையையெல்லாம்
முதுகிலே, மனத்திலே சுமப்பதாகத் தெரியவில்லை.
என் சுமை கனப்பானேன்? அவர்கள்
சுமை கண்ணில் படாமல் இருப்பானேன்?
முதுகிலே அழுக்கு மூட்டை
சுமந்த குள்ளச்சாமி
நீ உள்ளே சுமக்கிறாய்
நான் முதுகிலே சுமக்கிறேன்
என்று சொன்னதாக பாரதி
க(வி)தைக்கிறான். எது அழுக்கு
எது சுத்தம் என்று குள்ளச்
சாமிக்குத் தெரியுமா என்று
எனக்கு ஒரு சந்தேகம்.
வண்ணான் வெளுத்ததெல்லாம்
வெள்ளையா? புண்ணிய மூட்டை
சுமப்பவனும் சுமப்பவன்தானே!
பணமூட்டை சுமப்பவனும்
சுமப்பவன்தானே? ஏழ்மை
மூட்டையும் மூட்டைதானே?
அறிவுச் சுமையும் சுமைதான்
அவலச் சுமையும் சுமைதான்
சுமை தாங்கும் அவ்வளவு பேரும்
தெருவில் எதிர்ப்படுகிற அத்தனை பேரும்
கண்களில் அமைதியுடன்
எப்படி நாட்களைக் கழிக்கிறார்கள்? நான் மட்டும் ஏன்
கண்ணாரைக் கணக்கிடுகிறேன்?
எனக்கே தெரியவில்லை என்ன செய்ய?
3
கோயில் கோயிலாகப் புகுந்து தேடி
புத்தகம் புத்தகமாகப் படித்துத் தேடி
எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் கேட்டுத்
தேடிக் கண்ட தென்ன?
ரெயிலில் கூட வந்த ஜோடி
காசிக்குப் போவதாகத் தெரிவித்தபோது
“என்னவேலை?” என்று விசாரிக்க
புகழன் தயங்க, மனைவி
சுகஜீவனம் தான்”
என்று சர்வ நிச்சயமாகச் சொன்னது
நினைவுக்கு வருகிறது.
உலகில் பிறந்தவர், இறந்தவர்
இறக்கப் போகிறவர் எல்லாம்
சுகஜீவனம் தான் வேறு என்ன?
பிறந்து குவா என்று அழுதது முதல்
மூச்சடங்கிப் பேர் நீங்கிப்
பிணமாகிப் போகும் வரை
வாழ்ந்ததெல்லாம்
ஜீவனம்தான். ஆனால்
சுகம் என்பது என்ன?
புழுக்கமான பொழுதிலே மழைத்துளி
விழுவதா? கையில் உள்ள சொறி சிறங்கைச்
சொறிந்து அறிவதா? குரூபிக்குரல் கேட்டு
கவிதை எழுதுவதா? வெண்ணை முகர்ந்து
துளி இன்பம் அடைவதா? எம்ஜிஆர்
சினிமா பார்ப்பதா? பரமேசுவர ஐயர்
ஹோட்டலில் அன்று சாப்பிட்டதை
நினைத்துச் சுவைப்பதா? புகை பிடிப்பதா?
தாகம் தீரத் தண்ணி போடுவதா?
நல்ல புஸ்தகம் ஒரு நாளு படித்தேன்
என்று மகிழ்வதா? பிறருக்குதவினேன்
என்று பெருமைப்படுவதா? பில்லிடம்
பார்த்தேன் என்று மகிழ்வதா? எது?
சுகஜீவனம் எது என்று தேடுவது?
நாயாய்க் குலைப்பதா? நரியாய்ப்
பதுங்குவதா? பறவையாய்த் திரிவதா
கழுகாய் வியர்ப்பதா? மனிதனாய்ப்
பேராசைப்படுவதா? ஒட்டைச் சிவிங்கியாய்
உயர்வதா? யானையாய்ப் பெருப்பதா
எருமையாய்க் குட்டையில் விழுந்து
கிடப்பதா? பெயர் எடுப்பதா?
புகழ் அடைவதா, பணம் சேர்ப்பதா
கீதம் பாடுவதா? எது எது எது
தெரியாதவன் என்ன செய்ய?
தெரிந்தவன் தான் என்ன செய்ய?
எப்படிச் செய்ய?
4
தத்துவதரிசிகள் ஆயிரம் பேர்
கண்டு சொல்லிவிட்டார்
பொருளாதார மேதைகள் ஒரு கோடி
விண்டு சொல்லி விட்டார்.
அரசியல்வாதிகள் ஒரு பத்தாயிரம் பேர்
இருந்து கண்டுவிட்டார்.
கலிகள் ஒரு ஆயிரம், நாடகாசிரியர்
ஒரு ஆயிரம், கட்டுரையாளர் ஒரு ஆயிரம்
பிட்டுப் பிட்டு வைத்துவிட்டார்.
ஆனாலும்
நாய்கள் நள்ளிரவிலே குலைக்கின்றன
மனிதன் அலைகிறான் அலைகிறான்
என்ன செய்ய என்று தெரியாமல்
