
ஆற்றங்கரைப் படித்துறை
மருத மரத்தில்
அறையப் பட்ட ஆணியில்
தொங்கி அசைகிறது
தற்காலிக சலூன் கண்ணாடி.
முங்கி முங்கி நீந்திவந்து
முகம் பார்த்துச் சிரிக்கிறார்கள்
ஆனைப் பாறையில் குளிக்கவந்த
அக்கா தம்பி தங்கைச் சிறார்கள்.
கல் மண்டபத் தூணில்
புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று
நிழலுடன் பேசுகிறது முதிர் வெள்ளாடு.
கருமாதி மொட்டையுடன் வருகிற
மூன்று சகோதரர்களில் மூத்தவன்
சுழித்துத் திரும்பும்
ஆற்றைப் பார்த்தபடியே
நான்கு எட்டுக்குப் பின்னால்
திகைத்து நிற்கிறான் அசையாமல்.
