
முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.
ஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ?
ஏன் கூடாது? அதற்காகவும்தான் எழுதுகிறேன்.
இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.
முதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ஏன்?
ஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.
வாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.
சரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா?
முடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்?
யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.
ஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல் ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள்? எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.
- எம்.ஜி.சுரேஷ்
நன்றி: பதாகை - முகநூலில் பதிவு : ஆர்.கந்தசாமி
