குமுதம் இதழ் விற்பனையில்

குமுதம் இதழ் விற்பனையில் வெற்றியடைந்தமைக்கு காரணங்கள் பல சொல்லப்படுகின்றன.

அன்று புகழ்பெற்றிருந்த இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் ஆகியவை பிராமணப் பண்பாட்டை முதன்மையாக முன்வைத்தவை. வாசகர்களும் எழுதுபவர்களும் முதன்மையாக பிராமணர்கள் என்பதே காரணம். குமுதம் பிராமணர்கள் எழுதினாலும்கூட பிராமணப் பண்பாட்டுச் சாயலே இல்லாமல் நடத்தப்பட்டது. ஆகவே இந்திய சுதந்திரத்திற்கு பின் கல்வி கற்று மேலெழுந்து வந்த பிராமணரல்லாத சமூகங்களின் ஆதரவை அது பெற்றது.
கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி ஆகியவை குடும்பப் பத்திரிகை என்னும் இலக்கணத்திற்குள் நின்று பாலியல் சார்ந்த எழுத்துக்களை மட்டுப்படுத்தின. குமுதம் தொடர்ச்சியாக அன்றைய பாலியல்வெளிப்பாட்டு எல்லையை மென்மையாக மீறிக்கொண்டே இருந்தது. ஆகவே இளையவாசகர்களை ஈர்த்தது.
குமுதம் எதிர்வினைகள் வழியாக தன்னை உருவாக்கிக் கொண்டது. ஆகவே அது சினிமாவை மிக நெருக்கமாகவே தொடர்ந்தது. சினிமாச்செய்திகளுடன் சினிமாவை பயன்படுத்தியே மற்ற அனைத்தையும் முன்வைப்பது என்னும் பாணியை மேற்கொண்டது. (உதாரணமாக காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி பிடியரிசி திட்டம் ஒன்றை அறிவித்தபோது அச்செய்தியை அன்றைய நட்சத்திரமான சௌகார் ஜானகி பிடியரிசி போடும் படத்துடன் வெளியிட்டது)

நன்றி: தமிழ் விக்கி

தகவல் : ஆர்.கந்தசாமி