நிர்வாணம்!/ஜெ.பாஸ்கரன்

அவன் ஓர் ஓவியன்.

இயற்கையழகுடன் வரைவதில் நிபுணன். திரையில் வானம் வரைந்தால், மேகங்கள் மழை பொழியும்! அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும் அவனது ஓவியங்கள்.

அவள் முழு நிர்வாணமாக எதிரிலிருக்கும் திரைச்சீலையைப் பார்த்தவாறு தலை சாய்த்துப் படுத்திருந்தாள். கலைக்காகவும், காசுக்காகவும் மனமுவந்து செய்யும் தொழில் – அவள் ஒரு மாடல் அழகி! அதற்கேற்ற உடல் வாகும், அழகும் இறைவன் கொடுத்த வரம். அதற்காக நன்றியுடன் இருப்பவள்.

ஓவியன் கேட்டபோது அவனை அவள் அறிந்திருக்கவில்லை, தயங்கினாள். பின்னர் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவனது ஓவியக் கூடத்திற்கு ஒரு நாள் வந்தாள்.

அழகு, அழகு, எல்லா இடங்களிலும் பொங்கி வழியும் அழகு! திரையிலிருந்து மலையருவி இவள் மேல் கொட்டுவதைப்போல… வெண்மேகங்கள், இவளைத் தழுவிச் செல்வதைப்போல…

மற்றொரு அறையில் நிர்வாணங்கள்.. பூச்சின்றி இயல்பாய் படைத்தவன் படைத்தபடி இயற்கை நிர்வாணங்கள்!

“உங்கள் ஓவியங்கள் பேசுகின்றன. கற்பனை விண்ணைத் தொடுகின்றது”

“அனைத்தும் உயிர்ப்புடன் பார்த்து வரைந்த ஓவியங்கள். கற்பனைக்குச் சிறிதும் இடமே இல்லை”

அவள் ஒப்புக்கொண்டாள்!

அவன் சொன்னபடியே சாய்ந்தாள், நிமிர்ந்தாள், பார்த்தாள்! எதிரிலிருந்த திரைச் சீலை அவள் அழகைப் பார்த்துப் படபடத்தது! ஒளிரும் விளக்குகள், இருட்டையும், வெளிச்சத்தையும் சரியான விகிதத்தில் அவள்மேல் பூச, அவளே ஓர் ஓவியமாய்த் தெரிந்தாள்.

நிமிடங்கள், மணிகள், நாட்கள் எனக் காலம் ஓடியதே தெரியாமல், கலை வளர்ந்து கொண்டிருந்தது. திரையில் அங்க வளைவுகளுடன், சிலையெனக் கிடந்தாள் ஓவியமாக!

ஓவியம் உயிர் பெற்றதைப்போல மெல்ல நடந்து வந்தாள். நன்றி என்றாள்.

தற்கொலை செய்துகொண்ட தன் சகோதரியின் பெயரைச் சொல்லி, ‘அவளுக்காக’ என்றபடி, கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்துச் சுட, சாய்ந்தவன் இரத்தம் தரையில் அழகான ஓவியமாகப் படர்ந்தது.

அவசரமாகக் கிளம்பியவள், திரும்ப வந்து, தூரிகையால் தன் ஓவியத்திற்கு ஒரு மேலாடை வரைந்து சென்றாள் – கோணலாக!