மழை…/முருகு

முதல் மழை முதல்
முடியும் மழை வரை…

முழுக்க நனைந்து…
மூக்கொழுகிக் கண் சிவந்து…

மூச்சு விட முடியாமல்
காய்ச்சல், சளி, இருமல் வந்து…

முதுகில் அடி வாங்கி
முழுக்கப் போர்த்திப் படுக்க வைத்து…

கற்பூர வள்ளியும் இன்ன பிற
கை வைத்திய மருந்துகளும்…

ஓக்காளம் எடுத்து ஒருவாறாய்
மூக்கைப் பிடித்துக் குடித்து முடித்து…

மீண்டும் அடங்காமல்
மீள் மழை குளித்து…

அடித்தது போல் நடிக்கும்
அம்மாவின் அன்பெல்லாம்…

அழுதது போல் நடித்து
அப்பாவை ஏமாற்றி…

எத்தனை அடைமழை!!!
எப்படி ஆடினோம்!!!

இன்றோ அடுக்ககக் கூண்டுக்குள்…
இறுக்கப் போர்த்தி…

சாரல் மழையையும்
தூறல் மழையையும்

சாளர வழி எட்டிப் பார்த்து
சங்கடத்துடன் புரண்டு படுத்து

“சனியன் புடிச்ச மழ
துணியெதுவும் காயாது”

சலிப்புடன் சொல்கிறோம்
தெளிகிறது வானம்…