இனிக்கும் தமிழ் – 152/டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம்

நச்சுப் பொய்கை மீன்

மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும்.
அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், தண்ணீரை விட்டு
குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது …
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை.
மாரீசனுக்கு.

இராவணன் , மாரீசனை பொய் மான் வடிவில் போ என்றான். போனால் இராமன் கையால் சாவு உறுதி. போகா விட்டால் இராவணன் கையால் சாவு உறுதி. நச்சு பொய்கை மீன்போல் ஆனான் என்றான் கம்பன். என்ன ஒரு கற்பனை. கற்பனையில், கம்பனை மிஞ்ச ஆள் கிடையாது.

பாடல்

வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதா
ல்.

பொருள்

வெஞ் சுற்றம் – நெருங்கிய சுற்றத்தாரை
நினைந்து உகும்- நினைத்து கண்ணீர் விடுவான்
வீரரை -இராம, இலக்குவனர்களை
வேறு அஞ்சுற்று மறுக்குறும்- நினைத்து மறுகுவான்
ஆழ் குழி நீர் – ஆழமான குழியில் உள்ள நீரில்
நஞ்சு உற்றுழி- நஞ்சு கலந்தால்
மீனின் நடுக்குறுவான்-அந்த நீரில் வாழும் மீனைப் போல நடுங்குவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி -அவன் மனதில் உள்ள எண்ணங்கள்
நினைப்பு அரிதால்- நினைத்துப் பார்க்கக் கூட கடினமானது