
1000 நீதி கதைகள்
ஆகாகான் மாளிகையில் கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் மிகவும்
உடல் நலமின்றி படுத்திருந்தார். சிவசர்மா என்னும் ஆயுர்வேத வைத்தியர் அவரைக் கவனித்து வந்தார்.ஆனால் சிவ சர்மா இரவு வேளையில் மாளிகைக்குள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஆகவே சிவ சர்மா இரவு வேளைகளில் தம்முடைய உதவி வேண்டியிருந்தால், தாம் பக்கத்தில் இருக்க வேண்டுமே என்பதற்காக, இரவு வேளைகளில் சிவ சர்மா ஆகாகான் மாளிகைக்கு வெளியே ஒரு மோட்டார் காரில் படுத்துத் தூங்குவார்.
,
இரவு வேளைகளில் அம்மையாரின் உடல் நிலை மோசமாக இருந்தால், உடனே அவரைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் சிப்பாய் எழுப்பப்படுவான். உடனே அந்தச் சிப்பாய் மாளிகையின் வாசல் சாவியை வாங்குவதற்காகத் தன் மேலதிகாரியை எழுப்புவான். பிறகு சிறையில் ஜமேதார் எழுப்பப்படுவார். அவர் சௌக்கிதாரை எழுப்புவார். சௌக்கிதார் சென்று சார்ஜன்டை எழுப்புவார். இவர் வெள்ளையர். பிறகு இவர் கதவைத் திறக்கலாம் என்று உத்தரவு கொடுப்பார். பிறகுதான வாசலில் மோட்டார் காரில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் வைத்தியர் உள்ளே நுழைந்து கஸ்தூரிபாய்க்கு வேண்டிய சிகிச்சையைச் செய்வார்.
ஆனால் கஸ்தூரிபாயைக் கவனிப்பதற்காக இப்படி ஏமெட் தூக்கத்திலிருந்து எழுப்புவது காந்திஜிக்குத் தவறாகப் பட்டது. உடனே அவர் அரசினருக்கு
ஒரு கடிதம் எழுதினார். ‘என் மனைவி ஒருத்தியின் சௌகரியத்திற்காக, ஏழெட்டுப் பேரை அனாவசியமாக எழுப்புவது எனக்குத் தவறாகப்படுகிறது. ஆகவே நாளை இரவிலிருந்து வைத்தியரை ஆகாகான் மாளிகைக்குள் தங்க அனுமதியுங்கள். இல்லையோ, ஆனது ஆகட்டும் என்று நான் என் மனைவிக்கு, வைத்திய உதவியே தேவையில்லை என்று தீர்மானித்து விடுவேன்”என்று எழுதினார்.
கடிதத்தைக் கண்டதும் அரசாங்கம் மனம் இரங்கிற்று. ஆகாகான் மாளிகைக் குள்ளேயே வைத்தியர் தங்க அனுமதித்தது.
மனைவியின் தேக நிலையை விட மற்றவர்களின் தூக்கம் கெடக் கூடாதே என்பதில்தான் காந்திஜிக்கு எத்தனை அக்கறை! அன்பே அவதாரமாக விளங்கினார் காந்திஜி.
