பிராது…!


ஆர்க்கே

ஒரு நட்பு நீதிமன்றத்தில்
சில நாட்கள்முன்
என்மீதான
நட்பின் அவதூறு வழக்கொன்றை
தீர விசாரிக்கச் சொல்லி
பரபரத்தார் ஒரு நண்பர்.
கண் காது மூக்கு வைத்து
அந்த அவதூறை
துல்லியமாய் பின்னியிருந்தார்
அவர்.
தோழமை நீதிமன்றத்தில்
நியாயத்தராசு கைக்கொண்ட
நட்புதேவன் முன்னிருக்க
வழக்கை விசாரிக்க என
எடுத்தார் நீதி நண்பர்.
நானும்
பிராது தந்தவரும்
அவர் மனக்கண்முன்
ஆராய்ச்சிக்கு வந்துநின்றோம்.
சற்று மௌனமாய் உருண்டது
காலம்.
சாட்சிகளிலிருப்பதாய்
படபடத்த நண்பர்
என்னை அவதூறு வழக்கில்
வீழ்த்திவிட முனைப்பு கொண்டார்.

தோழமையின் நீதிபதி சொன்னார்
இப்படி:-
“எனக்கு அவனைப்பற்றியும் தெரியும்.
உன்னைப் பற்றியும் தெரியும்.
அவனிடம் கேட்க வேண்டிய
அவசியமேயில்லை.
இது தள்ளுபடிக்கான பிராது
மட்டுமல்ல.
இப்போது
உன்னை முழுதாய் அறியநேர்ந்தபின்
உன் நட்பும்கூட எம்மிடமிருந்து
தள்ளுபடியாகிறது இன்றிலிருந்து. “