
என்கடன் சுமை சுமந்து
கிடப்பதன்றி வேறில்லை
எவருக்கும்யான் பாரமில்லை..
என் பெயரோ கழுதையென்றீர்…!
கற்பூரம் யாமறியேன்..
கடுங்கோபம் யானறியேன்..
பொற்புடைய பொறுமையுடன்..
பூமியிலே யான் பிறந்தேன்.!
சுமப்பது ஒன்றுவிட்டு
சூது வாது ஏதுமறியேன்
இமைப்பொழுதும் எம்மை
வளர்ப்பவரை மறந்தறியேன்…!
இயேசுவையும் யான்சுமந்து..
இறைத் தொண்டு ஆற்றியவன்….
பேசுகின்ற மனிதருக்கே
பெரும்பாரம் சுமப்பவன் யான்.!
அழுக்கு மூட்டைகளை
அனைவருக்காய் சுமந்திடுவேன்!
அகத்துக்குள் அழுக்கில்லை!
அறிவீரோ.. மானுடரே.!
கனைக்கும் குரல்கேட்டு
காதுகளைப்பொத்துகிறீர்..
எனக்கும் இசை ஞானம்
உண்டுயிதை அறிவீரோ?
மனிதருக்கு கடனாற்ற மகேசன்
எனைப்படைத்தான்!
இனியேனும் கழுதைகளை
கருணையுடன் நடத்துவீரோ.!
.
