தாத்தா மழையின் வயது என்ன?/கேள்விக்காரன்…

கட்டிய என்
கை சிம்மாசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்து
கண்கள் விரிய
பெயர்த்தி கேட்டாள்

தாத்தா மழையின் வயது என்ன

அதிர்ந்த நான்
அந்த வானம் வயது
என்று உளறினேன்

அப்ப அந்த வானத்தின்
வயதென்ன என்றாள்

தொடர் வினா
ஊறு உணராது
கடல் வயது என்றேன்

அய்யோ மக்குத் தாத்தா
கடலின் வயதுதான்
என்னவென ஊரும் வினா வீசினாள்

வானம் கடல் மொழிந்த
வேறு தொன்மம்
தேடிய போது
அவளே மண் காற்று நட்சத்திரம் என அளப்பு
தொடராதே

நான் சொல்லவா
என வெடுக்கென
கேட்டாள்.

ம்ம்… ம்ம்
என்றேன்
அறியாமை
மூகமூடிக்கு மேலுமொரு
கர்வ மூடியிட்டு

பெயர்த்தி சொன்னாள்
பசியறிந்து பால்ஊட்டும்
அம்மா வயது

நான் விழித்தேன்.

அவள் விளக்கமும்
சொன்னாள்

அளவாய் வளமாய்
உரமாய் நேரத்தில் அமுதூட்டும் ஈன்ற
தாயின் பெருங் கருணை வயதே
தாய்க்கும் …

நான் அவளின்
அறிவுச்
சேயானேன்


04/11/2022.
காலை மணி :08:41