கண்மாயில் குளித்து விட்டு வரும்போது
உலர்த்தி விடும் தலை முடியும் ஒரு அழகு
தோட்டத்தில் மலராக உள் நுழைந்து
பூக்கொய்யும் விரல் நளினம் ஒரு அழகு
மூன்று விரல் இடுக்கு வழி வழிகின்ற
கோலப்பொடி மயிலாவது ஒரு அழகு
பாவாடை தாவணியின் இறுக்க அழகில்
பையப்பைய நடந்து வருவது ஒரு அழகு
பள்ளிக்கூடப் போட்டிகளில் பரிசு பெற்று
பதவிசோடு மேடையேறும் ஒரு அழகு
எத்துக்கல் நொண்டியாடும் விளையாட்டில்
தோழிகளைத் தோற்கடிப்பது ஒரு அழகு
கொலுசொலிக்க குடத்தோடு குளக் கரைக்கு
கூட்டமாகச் செல்லுவதும் ஒரு அழகு
சினிமா சங்கீதத்தின் சில வரிகள்
செவ்விதழ்கள் வழிவழிவது ஒரு அழகு
படுக்கையை உதறிப்போட்டு படுத்தவுடன்
போர்த்திக்கொண்டு முயல்போல ஒரு அழகு
காலை முதல் இரவு வரை உன்னையே
கவனித்து ஏங்குகின்ற காதல் அழகு

