நெருப்பு/ப.மதியழகன்

உடலில் சூடு இருக்க
உயிர் இருப்பது ஊர்ஜிதமாகும்
இருக்கைகளைத் தேய்த்துக் கொள்ள
உஷ்ணம் வெளிப்படும்
அடிவயிற்றில் எரியும் தீ
அணைவதேயில்லை
சவச்சிரிப்பு தான்
என்னமோ செய்கிறது மனிதர்களைச்
சைவத்தில் பஞ்சபூதங்களுக்கும்
தலங்கள் உண்டு
காடுகளை அழிக்கப்
பார்த்தனோடு சேர்ந்து
கண்ணன் தீ மூட்டினான்
நெருப்பினுள் அகப்பட்டு மாய்ந்த
சர்ப்பங்களின் சாபத்தால்
கண்ணன் கண்ணெதிரிலேயே
யாதவ குலம் அழிந்தது
பரிதியின் உஷ்ணம்
செயலைத் தூண்டுகிறது
மனமும் உடலும்
கர்மத்தில் உழல்கின்றன
அதனால்
சூட்சுமமான கர்மத்தளைகளில்
உயிர்கள் சிக்கிக் கொள்கின்றன
கடைசியில் தீயே உடலைத்
தின்கிறது
வெளிச்சம் இருளின் நிழல்
இருளே உலகின் இயல்பு
திரெளபதியின் உக்கிரத்தால்
அன்று பாரதம்
பற்றி எரிந்தது
கண்ணகியின் கோபம்
மதுரையை எரித்தது
பிரளயத்தால் மனிதன்
கற்கால வாழ்க்கை முறைக்குப்
பலவந்தமாகத் தள்ளப்பட
அக்னியின் மரணத்தாகத்துக்கு
பூமி இரையானது
கொஞ்சம் கொஞ்சமாகப்
பிரபஞ்சம் தன்னுள் ஒடுங்குகிறது
காலமற்ற நிலை
பேரமைதி நிசப்தம்
அதிர்வுகள் மீண்டும்
சலனத்தைத் தோற்றுவிக்கின்றன
பெருவெடிப்பு உண்டாகிறது
உஷ்ணத்திலிருந்து உயிர்கள்
வெளிப்படும்
புல்லாகி, பூண்டாகி
மண்ணாகி, மரமாகி
மீண்டும் மனிதனாகும்
மீண்டும் முடிவை நோக்கிய
நெடும் பயணம்
ஆதியிலிருந்து ஆரம்பமாகும்!