
அம்மா புரிந்து கொள்
இப்போது உன்னை
வெளிநாடு அழைத்துச்செல்ல
எங்களால் இயலாது
என்றான் பெரியவன்
எனக்கே ஒற்றைச் சம்பளம்
வெளியூர்
வேலைவேறு..
நான் எப்படி
என்றான் இளையவன்
அம்மா புரிந்து கொள்
என் புகுந்த வீட்டார் பற்றி
நீ அறியாததா
என்றாள் மகளும்..
புரியவில்லை..
புரிந்துகொள்வதும்
பொறுத்துக்கொள்வதும்
ஒன்றுதானா?
கருத்தொருமித்துக்
கையெழுத்திட்டுக்
காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்
கட்டியணைத்துச் சொல்லிக்கொண்டு
கிளம்ப எத்தனித்தார்கள்
கண்களைத் துடைத்தபடி
அதனால்
ஈரமான கைகளையும்தான்..
கடைசி வரை
கழுத்தை இறுக்கிய
பிஞ்சுக் கரங்களையும்
தோளில் புதைத்த
பஞ்சு முகத்தையும் அகற்றாது
இடுப்பை விட்டு இறங்காது
அடம் பிடித்தான்
குட்டிப் பேரன் மட்டும்..
அவனுக்கும் ஏதோ
புரிந்து இருக்கவேண்டும்
