
செங்கல் செங்கலாக
உயர்ந்துக் கொண்டிருந்தது
அந்த பன்மாடி அடுக்ககம்
முடியும் தருவாயில்
சாரக்கட்டில் சொகுசாக
அமர்ந்து பன்னிரண்டாவது மாடியில்
சரியான வாஸ்து
உடைய
குடியிருப்பின் வெளிச் சுவரில்
குளிர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட
பச்சை வண்ணம் பூசுகையில்
தவறி விழுந்து
மூளையில் ரத்தம் கசிந்து
செத்துப் போனான்
அடி மண்ணுக்கு
சிவப்பு வண்ணம்
சேர்த்து விட்டு
ஒருவன்
‘என்னடா எழவு பூமி பூஜெ பண்ணீங்க’
என்றலுத்தபடி
முதலாளி தந்த இழப்பீட்டுத் தொகை
ஒப்பந்ததாரர் கையில்
சற்றே இளைத்து
போய் சேர்ந்தது
அவனை எரித்து விட்ட
செய்தியுடன்
நாட்டின் ஏதோ ஒரு மூலையில்
முக்காடு போட்டு கைக்குழந்தையுடன்
ஒருத்தி ஒப்பாரி வைப்பதற்காக
இரண்டு நாட்களில்
அது மறக்கப்பட்டு விட்டது
ஏனோ பலமுறை பழுது பார்த்தும்
அந்த குடியிருப்பின் சுவரில் மட்டும்
ஒவ்வொரு மழையிலும்
பிடிவாதமாக ஏற்படுகிறது
ஈரக் கசிவு

நிறைய செய்திகள்..
கனமான உண்மைகள்..
அருமை..
சுவரில் மட்டுமா ஈரக் கசிவு , படிக்கும் ஒவ்வொருத்தர் கண்களிலும் ஈரக் கசிவு. மிகவும் அருமை மேடம்
கசிவு படிப்பவர் மனதிலும்.