வெள்ளி விழா தீபாவளி மலர்!/ஜெ.பாஸ்கரன்

சற்றே தாமதமான பதிவு.

வெள்ளி விழா கொண்டாடும் ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையின் வெள்ளி விழா தீபாவளி மலர், கண்கவர் அட்டைப் படத்தில் பாலா திரிபுரசுந்தரி, தாமரையின் மேல் அமர்ந்திருக்கும் ஓவியத்துடன் (ஓவியர் – தமிழ்) சிறப்பாக வெளிவந்துள்ளது. உள்ளே மஹா பெரியவா, ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஶ்ரீ முக்குறுணி விநாயகர், சத்குரு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஶ்ரீ ராஜராஜேஸ்வரி என வண்ணப் படங்கள் அணிவகுக்கின்றன.

இந்த மலரின் ‘தீம்’, பஞ்ச பூதங்கள் என்பதால், காடுகள் வேண்டும், மண் சார்ந்த கலைகள், மண்ணே சக்தி, பஞ்ச பூதமும் சூயஸ் கால்வாயும், அக்னி எனும் சக்தி என சுவாரஸ்யமான கட்டுரைகள் வந்துள்ளன. ‘மண்சார்ந்த தொழில்களை மேற்கொள்வோரை மணிமேகலைக் காப்பியம் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிடுகிறது’;

‘மண்ணுக்கும் தெய்வீகத்திற்கும் தொடர்பு உண்டு’ என்று பக்தி இலக்கியங்களிலிருந்து உதாரணங்கள்’; ‘சுற்றுச்சூழலைப் பசுமையாக வைத்திருப்பது அவசியம்’ போன்ற தகவல்கள் சிறப்பு.

குமாவூன் மலைப்பகுதிகள், காஷ்மீர், ஜெர்மனி, நெதர்லாந்து பயணக் கட்டுரைகள் வண்ணப் படங்களுடன் அந்தந்த ஊர்களுக்கே அழைத்துச் செல்கின்றன!

ஆன்மீகத் தகவல்கள், புராணக் கதைகள், சமயம் என நம் ஆன்மீக சிந்தனைகளுக்கு விருந்தாக ஆறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

லேடீஸ் ஸ்பெஷலில் கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை என்பதைப் பொய்யாக்கி, 11 சிறப்பான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த மலரின் சிறப்பு, இதில் வெளியாகியுள்ள 23 சிறுகதைகளினால் நிறைவு பெறுகிறது. இ.பா., கனகம் சர்மா(95 வயது), இரா முருகன், பா ராகவன், ராஜேஷ் குமார், தேவி பாலா, கிரிஜா ராகவன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், வேதா கோபாலன், சாந்தா தத், ஹெச் என் ஹரிஹரன், சுப்ர பாலன், ஜெ.ரகுநாதன், எஸ்வி வேணுகோபாலன், ரேவதி பாலு, எஸ் எல் நாணு என ஏராளமான எழுத்தாளர்களின் வித்தியாசமான சிறுகதைகள் மலரை சிறப்பிக்கின்றன.

‘Snippet’ வகையில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் ஜோக்குகளும், புகைப்பட கலாட்டாக்களும், தீபாவளி சமய ஊசிப்பட்டாசாய் சிரிக்க வைக்கின்றன!

என் பங்குக்கு ஒரு சிறுகதையும், ‘காஷ்மீர்’ பயணக் கட்டுரையும் உண்டு!

மொத்தத்தில் சுவாரஸ்யமான தீபாவளி மலர்.

Like

Comment