நான்/லாரா ரைடிங்

தமிழில் : க.நா.சு.

காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது
நெருப்போ எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது.
நான் கஷ்டப்படுவதோ – எனக்கு ஒரு தனிப்பெயர்
ஏற்பட்டு விட்டதனாலே தான்.
கல் கடினத்தினாலும்
ஒளி ஒளியினாலும்
பறவைகள் பறப்பதினாலும் – அதுபோல
நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன்.
இதற்கு முடிவு என்ன? மாற்று என்ன?
துயரமில்லாதிருப்பது எங்கே? எப்படி?
இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது எது?
என்று நான் நானுக்கும் அதிகமாவது?
துயர் உலகம் அதிக உலகமாகவும்
குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது?
விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும்
விழுவது எங்கே? எந்தப் பிரதேசத்தில்?
இன்னும் அதிகம் இறந்து
அதிகம் வாழ்வு தேட வேண்டும்
அதிக துயரத்திலே
செழுமை வாழ்வு தேட வேண்டும்.

(இலக்கிய வட்டம்)