
தலைச்சன் பெண் குழந்தை
தாளாத பெருமை அப்பாவுக்கு…
மகளின் அதிகாரத்தில்
பொங்கிச் சிரிப்பார்
மை வரைந்து, பொட்டிட்டு
முழம் பூ சூட்டி
முக்கனிச் சாறெனக் கொஞ்சி
முத்தமிடும் அம்மா
வீட்டின் இளவரசிக்குப்
பெயர் சூட்டு விழா
ஊர் கூடி வாழ்த்திட
கூடை நாற்காலி சிம்மாசனத்தில்
பாந்தமாய் அமர வைத்து
ஆரவாரமாய் எடுக்கப்பட்ட புகைப்படம்
அத்தைக்கு ஒன்று, ஆச்சிக்கு ஒன்றென ஐம்பதிற்கும் மேல் நகலெடுத்து
உறவுகளுக்கு ஈந்து உவந்த விழா
தன் இறுதிகாலம் வரை
பெருமையாக அம்மா பேசிட
எங்கள் வீட்டில் எப்பவோ
தொலைந்து போன புகைப்படம்
இதோ… இன்று …
உறவின் வழியே எனது கைகளில்…
தேடாமல் கிடைத்த புதையலாய்
நினைவுகள் சுகமானவை
உறவுகள் உன்னதமானவை.
