ஒரு நிமிடம் 1/அழகியசிங்கர்

ஒவ்வொரு முறையும்
பெங்களூர்
போகும்போது
டபுள் டக்கரில்
போகும்படி நேர்கிறது.

கூனிக்குறுகி சீட்டில் உட்கார
நேர்கிறது
என் கை
பக்கத்து சீட் காரரின் கையுடன்
இடிக்க நேர்கிறது

என் முன்
சீட்டில் ஒரு பெண்
கூந்தலை சரி செய்து
கொண்டிருக்கிறாள்
அவள் முகத்தை
நான் இன்னும் பார்க்கவில்லை
அவ்வளவு அடர்த்தியா
அவள் கூந்தல்
என்று தோன்றுகிறது

ஒரு பெண் அவ்வளவு
நீளமான
அடர்த்தியான
கூந்தலை சுமப்பது
பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.

யாரோ வேறு
மொழியில் பேசிக்கொண்டிருக்கும்
சப்தம்
காதைப் பிளக்கிறது.

நான் ஒரு கவிதையை
எழுதிக் கொண்டிருக்கும்போது
எப்போது முடிப்பேன்
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.