
பாக்ஸ் மேட்டர்:
எம்.டி.
மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12-1935. அவர் படித்தது பிரசண்டேஷன் கான்வெண்ட், சர்ச் பார்க், பி.எஸ்.ஹைஸ்கூல், அப்புறம் லயோலா கல்லூரியில் பி.காம் முடித்தார்.)
‘என் இறப்பில் யாரும் அழக்கூடாது, என் உடலுக்கு யாரும் மாலைகள் அணிவிக்கக்கூடாது, என் உடல் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட வேண்டும்’ என்று முன்பே உயில் எழுதித் திட்டம் செய்தபடியே அவருடைய உடல், போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.
இறுதிக் காலத்தில் நிறுவன ‘சேர்மன் எமரிடஸ்’ என்று அவர் கூறப்பட்டாலும் ‘எம்.டி.’ என்றுதான் அவரை எல்லோரும் மரியாதையுடன் குறிப்பிட்டார்கள்; குறிப்பிடுகிறார்கள்.
விகடன் எம்.டி.யின் நேர்முக உதவியாளாராக, அவருடைய இறுதிக்காலம் வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்தவர், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஜே.வி.நாதன், அவர் அமரரான டிசம்பர் 19 ம் தேதியை ஒட்டி, அவருடைய நினைவுகள் சிலவற்றை இங்கு பதிவு செய்கிறார்.
சேவற்கொடியோன்
ஜே.வி.நாதன்
விகடன் குழுமப் பத்திரிகைகளின் ஆசிரியர் இலாகாக்கள் நிர்வாகக் காரணங்களால் சென்னை கிரீம்ஸ் சாலையில் ஒரு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, சில வருடங்கள் அங்கு செயல்பட்டது. அச்சகம் அண்ணாசாலையில் வழக்கமான இடத்திலேயே இருந்தது.
நான் (ஜே.வி.நாதன்) விகடன் குழும இதழ்களின் ஆசிரியர் இலாகா நிர்வாகத்தைக் கவனிக்கும் செயல் அலுவலராக (எக்சிகியூடிவ் – எடிட்டோரியல் அட்மினிஸ்ட்ரேஷன்) இருந்தேன். கூடுதல் பொறுப்பாக எம்.டி.யின் பி.ஏ. (பர்சனல் அசிஸ்டெண்ட்) பணியையும் கவனித்தேன்.
எம்.டி. காலையில் சரியாக 8.10 மணிக்கு அலுவலகம் வருவார். நான் அதற்கு முன்னரே வந்துவிடுவேன். அவருடைய கார் வரும்போது வாசலில் நின்று வரவேற்பேன். ஓரிரு தினங்கள் என் இருக்கையில் அவசர வேலை எதிலாவது நான் மூழ்கிவிடும்போது, எம்.டி. வந்து தன் அறைக்கு வெளியில் நின்று ‘‘குட்மார்னிங் ஜே.வி.என்.ஸார்!’’ என்பார்.
நான் பதறி எழுந்து ‘‘குட்மார்னிங் ஸார்.. இதோ வந்துவிட்டேன்!’’ என்று ஓடுவேன். ஓர் சாதாரணப் பணியாளனான என்னைப் பெயருடன் ‘‘ஸார்’’ சேர்த்துத்தான் எப்போதும் விளிப்பார். என்னை மட்டுமல்ல, எல்லா அலுவலர்களையுமே எம்.டி. அப்படித்தான் அழைப்பார். இது அவருடைய பெருந்தன்மை!
அவரைப் பார்க்க வெளியிலிருந்தோ, அல்லது அலுவலகத்தவரோ யார் வந்தாலும், அவர்களை பார்வையாளார் பகுதியில் அமரவைத்துவிட்டு, எம்.டி.யிடம் கேட்டு, அவர் அனுமதி அளித்ததும் வந்தவரை உள்ளே அனுப்புவேன். எம்.டி.யின் மகனார் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் தந்தையைப் பார்க்க விரும்பினாலும் எம்.டி.யின் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றபின்னரே சந்திப்பார்.
2007-ம் வருடம் ஒருநாள் எம்.டி.யைச் சந்திக்க ஒருவர் கிரீம்ஸ் சாலை அலுவலகம் வந்தார்.
‘‘என் பெயர் ராம் மோகன். எம்.டி.யிடம் ‘ஸ்டெல்லா ப்ரூஸ்’னு சொல்லுங்க, தெரியும்!’’ என்றார்.
அவரை வியப்புடன் பார்த்தேன். ஆமாம், ‘அது ஒரு நிலாக்காலம்’, ‘ஒருமுறைதான் பூக்கும்’, ‘மாய நதிகள்’ ஆகிய அற்புதமான தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுதிய எழுத்தாளர்தான் அவர்!
தகவல் சொன்னதும் எம்.டி. அவரை உள்ளே வரச் சொல்லுவதற்குப் பதிலாக, எழுந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தார். எழுத்தாளரின் அருகில் போனார். ஸ்டெல்லா புரூஸ் எம்.டி.யைப் பார்த்ததும் எழுந்து நின்று எம்.டி.யின் கைகளைப் பற்றினார். குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அவரைக் கட்டியணைத்துக் கொண்டார் எம்.டி.
இந்த இடத்தில் எனக்கு ஒரு அதிசயக் காட்சி…
ஸ்டெல்லா புரூஸை அணைத்தபடி எம்.டி.யும் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்ததுதான் அது!
என்னால் நம்பவே முடியவில்லை. காரணம், எதற்கும் கலங்காதவர் எம்.டி. என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவரே இளகி அழுகிறார் என்றால்..? அந்தப் பக்கம் வந்த அலுவலர்கள் அக்காட்சியைப் பார்த்து அதிர்ந்து நின்றார்கள்.
விஷயம் இதுதான்…
எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ், ஹேமா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருந்தார். தன் மனைவியை ஸ்டெல்லா புரூஸ் உலகிலேயே மிக அதிகமாக நேசித்தார். தன் மனைவியை ஸ்டெல்லா புரூஸ் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, ஹேமாதான் அவரின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் காப்பாற்றி வந்திருக்கிறார். ஸ்டெல்லா புரூஸ் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். தன் காதல் கதையை ‘ஒரு முறைதான் பூக்கும்’ என்ற தன் நாவலில் அவர் எழுதியிருப்பதாகப் பலரும் சொல்லுவார்கள். ஹேமா உடல்நலம் குன்றி 2007 ஜூலையில் இறந்துவிட்டார்.
அச்சமயம் எம்.டி. அவருக்கு ஆறுதல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
சில நாட்கள் சென்றபின், தான் மிகவும் நேசித்த எம்.டி.யிடம் ஆறுதல் தேடி ஸ்டெல்லா ப்ரூஸ் விகடன் அலுவலகம் வந்தபோதுதான் இருவரும் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்ட சம்பவம் நிகழ்ந்தது.
அரை மணி நேரத்துக்கு மேலாக அறைக்குள் உட்கார வைத்துப் பேசி ஆறுதல் கூறியபின், எழுத்தாளரை வழியனுப்பி வைத்தார் எம்.டி.
அவர் போனபிறகு என்னை அழைத்தார். ‘‘மனைவி மீது அதீத அன்பு கொண்டவர் ஸ்டெல்லா புருஸ். மென்மையான மனம் படைத்த அவரால் மனைவியின் இழப்பைத் தாங்கிக்க முடியலை’’ என்று சொன்னவர் செக் புக்கைக் கொண்டுவரச் சொன்னார். அதில் ஒரு கணிசமான தொகையை (ரூ.25,000) ஸ்டெல்லா புரூஸ் பெயருக்கு எழுதிக் கையெழுத்திட்டார். ‘‘இன்னிக்கே அவருக்கு குரியரில் அனுப்பிடுங்கோ!’’ என்று சொல்லிவிட்டு, ‘‘இப்படி மனைவி மேல் பிரியமுள்ள எவரையும் நான் பார்த்ததில்லை. ஆனால், இது ரொம்ப டேஞ்சர்!’’ என்றும் குறிப்பிட்டார்.
எம்.டி. சொன்னது அப்படியே நிரூபணமாயிற்று. எம்.டி.யைச் சந்தித்துப் போன ஒரே வாரத்தில், மனைவி இறந்த சோகம் தாள முடியாமல், ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்!
இறப்பதற்கு முன் ஸ்டெல்லா புரூஸ் ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தாராம். ‘எங்கள் வாழ்க்கை மரபுக் கவிதையோ, புதுக் கவிதையோ இல்லை. மாறாக, இது இலக்கணம் இல்லாக் கவிதை. நாங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டோம். எங்களுக்குப் பின் எதையும் நாங்கள் விட்டுச் செல்லவில்லை. வாழ்க்கை இத்துடன் முடிகிறது…’
மென்மையான மனம் படைத்த ஓர் அற்புதப் படைப்பாளியின் துயர முடிவு தெரிந்த அன்று அலுவலகத்தில எம்.டி. மிகுந்த சோகத்துடனும் கனத்த மெளனத்துடனும் காணப்பட்டார். படைப்பாளியாகவும் நண்பராகவும் இருந்த ஒருவரின் இறப்பு, ‘இரும்பு மனிதர்’ என நான் நினைத்திருந்த எம்.டி.க்கு அத்தனை பாதிப்பு ஏற்படுத்தியதை என்னால் நம்பவே முடியவில்லை!
வேலூரில் நான் இருந்தபோது போனில் எம்.டி.யிடமிருந்து ஒரு நாள் அழைப்பு…
பணிவுடன், ‘சொல்லுங்க ஸார்!’’ என்றேன்.
‘‘இந்த இஷ்யூ ஜூ.வி.யில் ‘ஓலைக்குடிசையில் ஒரு ஒளிவிளக்கு’ன்னு ஒரு ஆர்ட்டிகிள் வந்திருக்கு, படிச்சீங்களா?’’ என்று கேட்டார். நல்லவேளை, படித்திருந்தேன்.
வேலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள வாழியூர் என்ற கிராமத்தில், ஒரு குடிசையில் வசிக்கும் ஏழை மாணவர் நாராயணசாமி சிம்னி விளக்கொளியில் படித்து பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தார். அவரைக் குறித்து விகடன் மாணவர் திட்ட பெண் நிருபர் ஒருவர் எழுதிய கட்டுரை அது. அந்த மாணவர், மேற்கொண்டு பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழலில் தன் குடும்பம் இல்லை என்று வருத்தப்படுவதாகவும் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எம்.டி. என்னிடம், ‘‘சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரே போய் அந்த மாணவரை மீட் பண்ணுங்க. எங்கு வேணும்னாலும் பாலிடெக்னிக் படிக்க அவரை அப்ளை பண்ணச் சொல்லுங்கோ. இடம் கிடைச்சதும் அவருடைய மூணு வருடப் படிப்புச் செலவு, ஹாஸ்டல் செலவு எல்லாவற்றையும் நாம் செய்யத்தயார்னு சொல்லிடுங்க. இதை நீங்க ஃபாலோ அப் செஞ்சு எனக்குத் தகவல் கொடுங்கோ!’’ என்றார்.
இதைத் தொடர்ந்து நான் வாழியூர் போய் மாணவர் நாராயணசாமியை அவருடைய குடிசையில் சந்தித்தேன். ஜூ.வி. ஆசிரியர் சொன்னதைத் தெரிவித்தேன். அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ரொம்பவுமே சந்தோஷம்.
குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் மாணவர் நாராயணசாமிக்கு இடம் கிடைத்தது. ஹாஸ்டலில் சேர்ந்தார். மாதாமாதம் நேரில் குடியாத்தம் போவேன். ஹாஸ்டல் ஃபீஸ் கட்டுவேன். படிப்பு, புத்தகம், பாலிடெக்னிக் உபகரணங்கள், உடை, ஷூஸ், வாட்ச் என்று அவரின் எல்லாச் செலவுகளையும் நான் செய்து, பில்களை எம்.டி.க்கு அனுப்பிப் பணம் பெற்றுக்கொள்வேன். ஒரு மாதம் கூட விடாமல் தொடர்ந்து மூன்று வருடங்கள் போய் மாணவரைச் சந்தித்து அவர் தேவைகளைக் கவனித்து வந்தேன்.
மாணவர் படித்து முடித்ததும் ஓசூரில் டைட்டன் வாட்ச் கம்பெனியில் வேலை கிடைத்துப் போனார். தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
—
ஒருமுறை ஓர் பெண்மணி எம்.டி.யைச் சந்திக்க வந்தார். அப்போது அவர் ஊரில் இல்லை. ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டேன்.
விகடன் அச்சகத்தில் முன்பு வேலை பார்த்த ஒருவரின் மனைவியாம் அவர். அவருடைய கணவர் விகடனிலிருந்து ஓய்வு பெறும்போது விகடன் தாத்தா படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப் பட்டிருந்தது. அந்தப் பெண்மணியின் கணவர் இறந்துவிட்டாராம். மாமியாருடன் வாழ்ந்து வரும் அந்தப் பெண், கணவர் பாதுகாத்து வைத்திருந்த விகடன் தங்க மோதிரத்தைத் தொலைத்து விட்டதாகச் சொன்னார். மோதிரம் தொலைந்தது மாமியாருக்குத் தெரிந்தால், தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார் என்று கண்ணீர் விட்டு அழுதபடியே சொன்னார் அப்பெண்மணி. மோதிரத்துக்குரிய தொகையைச் சிறுகச் சிறுகத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும், அதேமாதிரி விகடன் தாத்தா படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து தனக்கு வழங்குமாறும் கோரினார் அவர்.
அவர் சொன்னதை மனுவாக எழுதி வாங்கிக்கொண்டு ‘‘எம்.டி. ஊரில் இல்லை. வந்ததும் தெரிவிக்கிறேன்!’’ என்று சொல்லி, அனுப்பினேன்.
எம்.டி. ஊரிலிருந்து வந்ததும் அப்பெண்மணியின் விண்ணப்பத்தைப் படித்தார். மனுதாரர் சொன்னது உண்மையா அல்லது பொய்யாக இருக்குமா என்றெல்லாம் யோசிப்பார் என நினைத்தேன்.
ஆனால், அவர் எதைக் குறித்தும் கவலைப்படாமல், ‘‘உடனே ஒரு பவுன் மோதிரம் விகடன் தாத்தா உருவப் படத்தோடு செய்ய ஏற்பாடு செய்யுங்க!’’ என உத்தரவிட்டார். மோதிரம் தயாராகி வந்ததும் என்னிடம் கொடுத்து, ‘‘அந்தப் பெண்ணை வரவழைத்து மோதிரத்தைக் கொடுத்துடுங்கோ. இதுக்கான தொகையை அவர் எனக்குக் கொடுக்க வேண்டியதில்லைன்னு சொல்லிடுங்கோ!’’ என்று தெரிவித்தார்.
தன் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவரின் குடும்பத்தவர் பொய் சொல்ல மாட்டார் என்கிற நம்பிக்கை. மேலும், அந்தக் குடும்பத்தவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை மறு வார்த்தை பேசாமல் நிவர்த்தி செய்ய முனைந்த அவரின் பரோபகார உள்ளம் என்னை நெகிழச் செய்தது.
விகடன் எடிட்டோரியல் ஸ்டாஃப் அனைவருக்கும் கவிக்கோ அப்துல்ரகுமான் மூலம் தமிழ் வகுப்பு எடுக்க வைத்தார் எம்.டி. எடிட்டோரியலில் பணிபுரிபவர்கள் தமிழை எவ்வாறு பிழையில்லாமல் எழுதுவது என்று கற்றுக்கொள்ள இந்த வகுப்பு உதவும் என்று எம்.டி. சொன்னார்.
அழைப்பை ஏற்று கவிக்கோ சில வாரங்கள் விகடன் அலுவலகம் வந்து எளிமையாகப் புரியும் வகையில் ஆசிரியர் இலாகா அலுவலர்களுக்கு வகுப்புகள் நடத்தினார். விகடனில் பிழையாகத் தமிழ் வெளிவரக்கூடாது என்பதில் ஆசிரியர் உறுதியாக இருந்தார்.
ஜெயகாந்தன் விகடனில் எழுதிய 52 முத்திரைக்கதைகளை ஒரே தொகுப்பாகக் கொண்டுவர சென்னை, ‘கவிதா பதிப்பகம்’ விரும்பியது. இந்தத் தொகுப்புக்கு விகடன் எம்.டி. திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடம் அணிந்துரை வாங்க வேண்டும் என்று திரு ஜெயகாந்தன் கூறியிருக்கிறார். எனவே, கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம் எம்.டி.க்கு ஜெயகாந்தன் அவர்களின் விருப்பத்தைக் கடிதமாக எழுதி அணிந்துரை கோரியிருந்தார். எம்.டி. முன்னுரை வழங்க இசைந்தார்.
எம்.டி.யின் முன்னுரைக்கு முன் ஜெயகாந்தன் அந்தப் புத்தகத்துக்கு அளித்திருந்த முன்னுரையைப் பர்த்து விடலாம்…
ஜெயகாந்தன் அளித்துள்ள முன்னுரை இது:
‘1959 முதல் நான் ஆனந்தவிகடனில் எழுதத் தொடங்கினேன். அதற்கு முன்னால் வரை ‘ஆனந்தவிகடன்’ என்றால் நாமெல்லாம் எழுதத் தகுந்த பத்திரிகை அல்ல’ என்றொரு தப்பபிப்ராயம் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தபொழுது பல விஷயங்கள் குறித்து தப்பபிப்ராயங்கள் இருந்தன. அதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சியோ அதன் தத்துவமோ அல்ல. முழுக்க முழுக்க அது எனது அறியாமையே ஆகும் என்பது ஆனந்தவிகடனில் வேண்டா வெறுப்பாக எழுதப் போனதிலிருந்தே தெளிவாயிற்று. விளக்கமாகச் சொல்லுகிறேன்.
அப்போது ஆனந்தவிகடன் நிர்வாகத்துக்கும் அச்சகத் தொழிலாளர்களுக்கும் இடையே ஓவர்டைம் குறித்து ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ‘மதராஸ் பிரஸ் லேபர் யூனியன்’ தலைவர்களும் நிர்வாகிகளும் எனக்கு நெருக்கமான தோழர்கள். அவர்களின் திருப்திக்காக ‘ஓவர்டைம்’ எப்படி தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி இறுதியில் உயிரையே குடித்து விடுகிறது என்ற கருத்தை வைத்து ஒரு முற்போக்குக் கதை எழுதி நான் ஆனந்தவிகடனுக்குக் கொடுத்தேன். மனதிற்குள் ‘இந்தக் கதையை அவர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; ‘‘நான் அப்போதே சொன்னேனே; என் எழுத்துகளை உங்கள் பத்திரிகை தாங்காது என்று…’’ என்ற புதுமைப்பித்தன் மாதிரி மூஞ்சியில் அடித்தாற்போல், சொல்லிவிடலாம் – என்ற எண்ணத்தில் அந்தக் கதையைக் கொடுத்தேன். ஆனால் ஆனந்தவிகடன் அந்தக் கதையை மிகச் சிறப்பான முறையில் தனித்துத் தெரிகிற மாதிரி வண்ணத்தில் அச்சடித்து வெளியிட்டது! ஆனந்தவிகடனின் செய்கை என் தப்பெண்ணங்களைத் தலைகீழாக மாற்றி அவர்களோடு பலமான நட்பு ஏற்பட வழியமைத்தது. எனக்க்கு ஒரு தெளிவு பிறந்தது. ‘கலை இலக்கிய விஷயத்தில் வர்க்க பேதங்களுக்கும் மோதல்களுக்கும் இடமில்லை. மனிதாபிமானத்தையும் மனித வர்க்கத்திடையே நல்லுறவையும் உருவாக்கும் வல்லமையும் திறனும் உடையவை அவை. அவற்றைப் போய் பேதம் வளர்க்கவும் தப்பெண்ணங்களைக் கூர்மைப்படுத்தவும் பயன்படுத்துவது மாபெரும் தவறு’ என்ற படிப்பினையையும் தந்தது அந்த அனுபவம்.
ஆனந்த விகடனால் நான் விசேஷமாக மதிக்கப்பட்டேன். 1960 க்குப் பிறகு ஆனந்தவிகடனில் கதைகளுக்கு ‘முத்திரை’ இட்டுக் கெளரவப்படுத்துவது என்ற ஒரு தீர்மானம் அறிவிக்கப்பட்டது. முன்பு மாதிரியே மறுபடியும் தப்பபிப்ராயம் கொண்டு அந்த அறிவிப்பை விமர்சனம் செய்து ‘இனிமேல் ஜெயகாந்தன் கதை ஆனந்தவிகடனில் வெளிவராது’ என்று நான் ஆனந்தவிகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அப்போது ஆனந்தவிகடனில் ஆசிரியர் பொறுப்பிலிருந்த என் நண்பர் திரு எஸ்.பாலசுப்பிரமணியன் ‘உங்களைப் போன்றவர்களின் சிறந்த கதைகள் ஆனந்தவிகடனில் நிறைய வெளிவரவேண்டும் என்ற ஆவலால்தான் இப்படி ஓர் அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம். இந்த அறிவிப்பின் மூலம் எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த எழுத்தாளரை நாங்கள் இழந்து விடுவோமெனில் இந்த அறிவிப்பு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும்’ என்று சமாதானம் கூறி எழுதிய கடிதம் என்னை, என் தவறை மறுபரிசீலனை செய்ய வைத்தது. என் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிற முறையில் ‘சிறந்த கதைகளுக்குத்தானே முத்திரை? சிறந்த கதை எழுதி அதை நானே பெற்றுக் கொள்வது’ என்ற ஒரு தீர்மானத்தில் தொடர்ந்து ஆனந்தவிகடனில் சிறந்த கதைகளையே எழுதினேன். அவற்றுக்கு அவர்கள் ‘முத்திரை’ தந்தே தீர வேண்டியிருந்தது. ‘விகடன் முத்திரை எழுத்தாளர்’ என்று பலர் என்னை வேடிக்கையாகக் குறிப்பிட்டபோதிலும் அது மிகப் பொருத்தமாகவே அமைந்தது.
என்னைத் தொடர்ந்து பலரும் ஆனந்தவிகடனில் சிறந்த கதைகள் எழுதி, விகடனின் ‘முத்திரை’ பெற்றுத் தாமும் உயர்ந்து ஆனந்தவிகடனின் தரத்தையும் உயர்த்தினார்கள்! … அணிந்துரை வழக்கிய நண்பர் ‘ஆனந்தவிகடன்’ திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!’’
அன்பு, த.ஜெயகாந்தன், 19.08.2008. சென்னை-78.
‘ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள்’ என்ற புத்தகத்துக்காக விகடன் எம்.டி. திரு எஸ்.பாலசுப்ரமணியன் அளித்த அணிந்துரை இதோ:
‘ஜெயகாந்தனின் எழுத்துகளை முதன்முதலில் படித்தபோது ஒரு சராசரி வாசகன் என்ற முறையில் பளிச்சென்று என்னை ஈர்த்தது அந்த நடை! சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த காலகட்டத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியான பெரும்பாலான படைப்புகளில் காணப்பட்ட நடையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்த மின்சார நடை அது.
‘யார் இந்தப் படைப்பாளி? பத்திரிகை உலகம் எப்படி இத்தனை நாளும் இவரை கவ்விப் பிடிக்காமல் விட்டது? இத்தனை நாளும் இவரை நாம் ஏன் சந்திக்கவில்லை?’ என்ற பரபரப்பும் என்னுள்.
தாமதிக்காமல் ஜெயகாந்தனை உடனே சந்திக்க விரும்பினேன்; சந்தித்தேன்!
எழுத்தைப் போலவே அவர் பேச்சிலும் நிரம்பி வழிந்தது சுவாரஸ்யம். சரளமான பேச்சின்போதே கருத்துச் செறிவு அவரிடம் தெறித்தது.
அதன்பிறகு ஆனந்தவிகடனில் அவர் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாறு! அதிலும் ‘அக்கினிப் பிரவேசம்’ கதை அன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்திய புரட்சி அலைகளை என்னால் என்றைக்கும் மறந்துவிட முடியாது.
காலத்தில் முந்திச் சிந்திக்கிற ஒவ்வொரு படைப்பாளிக்கும் எழக்கூடிய இயல்பான எதிர்ப்புகள் ஜெயகாந்தனுக்கும் அப்போது எழுந்ததையும் மறந்துவிட முடியாது.
ஆனால், சத்தமிட்டு எதிர்ப்பவர்களின் குரலைத் தாண்டி மிகப் பெருவாரியான வாசக வட்டத்திலிருந்து அமைதிமிக்க பரவசமான ஒரு வரவேற்பு அவர் பக்கம் அலை அலையாக வீசத் துவங்கியதை மிகச் சரியாக உணார்ந்துகொண்டேன்.
அவர் படைப்புகளை ‘முத்திரைக் கதை’களாக வெளியிடத் துவங்கியபோது, அந்த முத்திரைக்கே ஒரு தனி அடையாளம் கிடைத்ததையும் சொல்லியாக வேண்டும். ஒரு கட்டத்தில், ‘இவர் படைப்புகளை முத்திரை இல்லாமல் வழக்கமான சிறுகதையாக வெளியிட முடியாது’ என்ற அளவுக்கு கருத்திலும், கண்ணோட்டத்திலும் அவருடைய வீச்சு கூடிக் கொண்டே போனதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
இன்று நூல் வடிவில் ‘முத்திரைக் கதைகள்’ தொகுப்பைப் புரட்டும்போது, அந்த நாட்களில் கதை விவாதத்துக்காக அவரோடு நான் கழித்த சுகந்தமான மணித்துளிகள் மனதில் மறுபடியும் அணிவகுக்கின்றன். அடுத்தடுத்து, அவர் பல பரிமாணங்களை எட்டிய காட்சிகளும் கண்முன் விரிகின்றன.
அந்த நினைவுகள், அவரோடான என்னுடைய நட்புக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. அவர் மீதான பிரமிப்பை மேலும் கூட்டுகின்றன.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் பெரும்பாலானவர்களுக்கு நிச்சயம் புதிதாக இராது. ஆனால், அவற்றை இப்போது படிக்க்கும்போது, எனக்குள் எழுகிற அதே பிரமிப்பு அத்தனை பேருக்கும் மறுபடி எழும் என்பது உறுதி.
அதுதான் காலங்களைக் கடந்த ஜெயகாந்தனின் எழுத்து!
அன்பன், எஸ்.பாலசுப்ரமணியன், சேர்மன், விகடன்குழுமம். 19-8-2008.
– விகடனைப் பற்றியும், எம்.டி.யைப் பற்றியும் ஜெயகாந்தன் கொண்டிருந்த கருத்தும் மரியாதையும், பதிலுக்கு ஜெயகாந்தன் எழுத்தின்பால் எம்.டி.கொண்டிருந்த நம்பிக்கையும் இந்த முன்னுரையிலும் அணிந்துரையிலும் தெளிவாகப் புலப்படுகிறதல்லவா? இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்…
தன் அணிந்துரையில் ஜெயகாந்தன் எழுதிய ‘அக்கினிப் பிரவேசம்’ என்ற பரபரப்பு ஏற்படுத்திய முத்திரைக் கதை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கதை 20-11-1966 தேதியிட்ட ஆனந்த விகடனில் பிரசுரமானது. கதையின் முடிவு குறித்து வாசகர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. முடிவு இப்படி அமையாவிட்டால் கதாநாயகியின் நிலைமை என்னவாகும் என்ற கற்பனையைத்தான் ஜெயகாந்தன் ‘காலங்கள் மாறும்’ என்ற தலைப்பில் ‘தினமணி கதி’ரில் எழுதத் தொடங்கி, அடுத்த வாரத்திலேயே தலைப்பை மாற்றி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தலைப்பிட்டு தொடர்கதையாக எழுதினார்.
ஆனந்தவிகடனில் 1960 ஏப்ரல் 17 இதழில் ஓவியர் கோபுலு அவர்களின் வண்ண ஓவியங்களுடன் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்..’ என்று ஒரு தொடர் அட்டகாசமாகத் தொடங்கியது. எழுதியவர் பெயர் ‘சேவற்கொடியோன்’.
அதே மாதிரி இந்தத் தொடர் முடிந்து 28-10-1962 தேதியிட்ட இதழில் ‘என் கண்ணில் பாவையன்றோ…’ என்று ஒரு தொடர், கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் தொடங்கி, வெளிவந்தது. பின்னர் ‘பேசும் பொற்சித்திரமே’ என்று ஒரு தொடர்கதையும் ‘சேவற்கொடியோன்’ என்ற எழுத்தாளர் எழுதி வாசகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்தத் தொடர்களை எழுதிய ‘சேவற்கொடியோன்’ வேறு யாருமல்ல; விகடன் எம்.டி. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள்தான்! மகாகவி பாரதியார் மீது தமக்கு இருந்த பற்றை, எம்.டி. தன் தொடர்கதைத் தலைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார்! கோபுலு அவர்களின் ஓவியங்களும் தொடர்கதையும் வாசகர்களை வெகுவாக வசீகரித்தது.
***
