
பிறந்தது
ஒரு கவிதை
சொற்கள்
தாம் தீமென
வந்து குதித்தன –
கூரற்ற சொற்கள்
தேய்ந்த சொற்கள்
பல்லாண்டாக
உயிரற்றுப் போன
சொற்கள்
செலாவணியற்ற
சொற்கள்
பிறந்தது
ஒரு கவிதை
தேய்ந்து
மழுங்கிய
உருவகங்கள்
உருவற்ற
பிண்டங்கள்
உன்னையும் என்னையுமே
எட்டாத
வணிகன்
பிறந்தது
ஒரு கவிதை
எத்தனை சிந்தனை
எத்தனை தடம் தேய்ந்த
பித்தனை ஏமாற்றும்
வித்தைகளின்
முடிவு
பிறந்தது
ஒரு கவிதை
பிறப்பிலே
உயிரற்று
ஓங்கி அழச்
சக்தியற்று
அலைகளை எழுப்பாத
கல்லாக
தண்ணியற்ற
தடாகத்துத் தாமரையாக
பிறந்தது
ஒரு கவிதை.
கவிதையா
அது
கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூராக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு
உபயோகமற்ற
பாத்திரங்களை
ஏற்றிவைக்கும்
மச்சிருட்டாக
கவிதையை நினைக்காதே.
