மனுஷ்ய புத்திரன் கவிதை

கடற்கரை சாலையில்
நெடுந்தூரம் சென்ற பிறகு
தேநீருக்கு நிறுத்துகையில்தான்
கவனித்தோம்
காரில் எங்களுடன்
ஏறிவந்துவிட்ட நத்தையை
காரின் கதவுக்கு வெளியே
எந்த மேடு பள்ளத்திலும்
பிடி தவறாமல்
அவ்வளவு நேர்த்தியாக பயணித்து
வந்திருந்தது
ஓட்டுனர் நத்தையை
காரில் இருந்து பிடுங்கி
சாலையோரம் விட்டான்
நான் அவனிடம்
” வீட்டிலிருந்த நத்தையை
இப்படி நீ வழியில் இறக்கிவிட்டால்
எப்படி வழி கண்டுபிடித்து வரும்?
அப்படியே வந்தாலும்
அதன் நடைக்கு வீடு வந்து சேர
எவ்வளவோ காலமாகிவிடாதா?”
என்றேன் கவித்துவ துயரத்துடன்
அருகிலிருந்த இளம் கவிஞன் சிரித்தான்
” நத்தைகளுக்கு
இந்த உலகின் மீது
நம்பிக்கை இல்லை
அதனால்தான்
அது தன் வீட்டை
தன் முதுகில் சுமந்தலைகிறது
மேலும்
அது உங்களோடு இருந்தபோதுகூட
உங்கள் வீட்டில் அல்ல
தன் வீட்டில்தான் வசித்தது
அது எங்குபோனாலும்
அப்படித்தான் வசிக்கும்
இந்த உலகில்
வீடின்மை எனும் துயரம்
நத்தைகளுக்கு மட்டும்
ஒருபோதும் நேராது ” என்றான்
நமக்கும் இப்படி
எதனாலும் இழக்க முடியாத
வீடொன்று இருந்திருக்கலாம்

13.11.2022
பிற்பகல் 3.40