இன்று நீரிழிவு நோய் நாள்/அழகியசிங்கர்

என்னுடைய
ஐம்பதாவது வயதில்
அலுவலகத்தில்
நடந்த மருத்துவ சோதனையின் போது
எனக்கு நீரிழிவு நோய்
இருப்பதாகச் சொன்னார்கள்.

கூடவே ஹைபர் டென்சன் நோயும்

நான் பயந்து விட்டேன்.

கடந்த
இருபது ஆண்டுகளாக
மருந்து
சாப்பிடுகிறேன்
கடந்த
சில மாதங்களாக
இன்சுலின்

உலகம் முழுவதும்
நீரிழிவு நோயால்
மக்கள் அவதிப் படுகிறார்கள்

இந்தியாவில்
சற்று அதிகம்

காபியில்
சர்க்கரைப் போட்டுக்
குடிப்பதை நிறுத்தி விட்டேன்

குலோப்ஜாம்
எனக்குப் பிடிக்கும்
குலோப்ஜாம் என்ற
வார்த்தையைக் கூட
உச்சரிப்பதில்லை

கடவுளைக் கேட்டேன்
எனக்கு ஏன்
இந்த நோயைக் கொடுத்தாயென்று

அவர் புன்னகைப்
புரிந்துகொண்டு
பேசாமலிருந்தார்

ஓ..அவருக்கும் நீரிழிவு நோயா