எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் /இராய செல்லப்பா

2022 நவம்பர் மாதம் ஏழாம் தேதி அமரரானவர். எழுத்தாளர் இதயவேந்தன். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்.

கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன் இருக்கிறார்கள். கடந்த 15 வருடங்களாக டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு உடல் நலிவுற்று இருந்தவர். அண்மையில் ஒரு ரிக்ஷாவில் செல்லும் பொழுது இடுப்புத் தசை பிடித்துக் கொண்டது என்று மருத்துவமனை சென்றவர், பாவம், திரும்பவில்லை.

தலித் இலக்கியத்தை ஆரம்பகாலத்தில் கட்டமைத்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர் என்கிறார் பழமலய். இவர் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். எல்லாமே தலித் இலக்கியங்கள் எனலாம். “நந்தனார் தெரு” என்கிற சிறுகதைத் தொகுப்பு இவருக்குப் புகழ் சேர்த்த தொகுப்பாகும்.
மரணப் படுக்கையில் இருந்த பொழுது கூட ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தாராம்; அதே போல, புத்தகமாக வராத அவருடைய சிறுகதைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடவும் முயற்சி செய்துகொண்டிருந்தாராம். (அவருடைய மனைவி சொன்னதாக ரவிக்குமார் எம். பி. தகவல்). அதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பு அமரராகிவிட்டார்.

இதயவேந்தன் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்க படைப்புகள்: “உயிரிழை”, “தாய்மண்”, “எவரும் அறியாத நாம்”, “தலித் கலை இலக்கியம்”, “நந்தனார் தெரு” ஆகியவை. வீரப்பன் விடுதலையின் பொழுது பேராசிரியர் கல்யாணி என்று கேள்விப்பட்டிருக்கிறோமே, அந்தப் பேராசிரியர் கல்யாணி அவர்களால் அடையாளம் காணப்பட்டவர் தான் இந்த இதயவேந்தன். அண்ணாதுரை என்பது இவருடைய இயற்பெயர்.

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் செயல்பாடுகளிலும், புரட்சிப் பண்பாட்டு இயக்கத்திலும், விழுப்புரம் நெம்புகோல் இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தன்னலமற்ற கொள்கைவாதியாக இவர் அறியப்படுகிறார்.

இப்படிப்பட்ட சீரிய எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் கதைகளைத் தக்க திறமையாளர்களைக்கொண்டு வாசிக்கவைத்தும் விமர்சிக்கவைத்தும் கௌரவப்படுத்துவதில் முன்நிற்கும் நமது அழகியசிங்கர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

தாத்தா செய்த துரோகம் – இதயவேந்தனின் சிறுகதை

இப்போது அவருடைய சிறுகதையான “தாத்தா செய்த துரோகம்” என்பதை வாசிப்புக்காக எடுத்துக்கொள்கிறேன். இக்கதை அவருடைய “உயிரிழை” தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாகும்.

சில பேருடைய கதைகளில் முதலில் இருந்து கடைசிவரை கதையாகவே இருக்கும். சில பேரின் கதையில், ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு அதை விவரிப்பார்கள். இன்னும் சிலர், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதனுடைய குணநலன்களை விவரிக்கும் ‘கேரக்டர் ஸ்கெட்ச்’ ஆகக் கதையைக் கொண்டுபோவார்கள். இவற்றைத் தவிரவும் வேறுவடிவங்கள் இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் முக்கிய வடிவங்கள். நாம் எடுத்துக்கொண்ட கதை இதில் மூன்றாவது பாணியைச் சேர்ந்தது. தாத்தா ஒருவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தான் இது.

கதைசொல்லி அவரது பேரனோ அல்லது பேத்தியோ. அது முக்கியமில்லை. தாத்தா வீட்டில் அவருடைய மகளும் மருமகனும் இருப்பதாகத் தெரிகிறது. அவரைப் பார்க்க அவருடைய சம்பந்தி வருவதாகக் கதை ஆரம்பமாகிறது.
நமது தாத்தா ஒரு காலத்தில்-அதாவது பிரிட்டிஷ் காலத்தில்- அரசாங்க ஊழியராக இருந்தவர். அப்போது அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்ததாம். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இருந்து நிறைய வருமானம் கிடைத்ததாம். அந்தச் செல்வாக்கை வைத்து, இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அரசியல்வாதி ஆகவேண்டுமென்று விரும்பினாராம். ஆனால், அப்போது நாடெங்கும் ஒரே கலவரம் எழுந்ததைப் பார்த்துவிட்டு பயந்துபோய், வீட்டோடு இருக்கலாம் என்று முடிவுசெய்துவிட்டாராம்.
கதையின் ஆரம்பத்தில் வரும் சம்பந்தியுடன் நிறைய பேர் கூட்டமாக வருவார்கள். அவர்கள் நாலு நாள் இங்கு தங்கினால் எவ்வளவு பால் செலவாகும் என்பதுதான் தாத்தாவின் கவலை. இவருக்கு காப்பி மீது கொள்ளை ஆசை. ஒரு நாளைக்கு 10 காபி குடிக்க வல்லவராம். ஆனால் அது எல்லா நாளும் கிடைபபதில்லை. இந்த மாதிரி சம்பந்தி வந்தால், அதை வைத்து இவருக்கும் கிடைக்கும். அவ்வளவுதான். பாட்டிக்கும் இதேபோல காப்பி பிடிக்குமாம்.
சம்பந்தியை உட்கார வைத்துவிட்டு, பால் வாங்குவதற்காக வெளியே போகிறார் தாத்தா. அப்போதுதான் அவர் யோசிக்கிறார் – “நாமே சொந்தமா ஒரு மாடு வாங்கிட்டா அந்தப் பாலை வியாபாரமும் பண்ணலாம், நமக்கும் எப்ப வேணாலும் யாரு கேள்வியும் இல்லாம காபி குடிக்கலாம்” என்று.
ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே! அதற்காக, அவர் தன் பணத்தை யார் யாருக்கு வட்டிக்குக் கொடுத்திருந்தாரோ அதைத் திருப்பி வாங்கித் தன் கோவணப் பையில் பத்திரப்படுத்தினாராம். அப்புறம் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனாராம் தாத்தா.

ஏதோ காரியமாகத்தான் வெளியூர் போயிருக்கிறார் என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. யாரும் பயப்படவில்லை. அதேபோல், அவர் திரும்பி வந்தபோது, அவரோடு ஒரு நல்ல தரமான பசுமாடும் வந்தது. அதற்கு மடி பெரியதாக இருந்ததாம். நிறையப் பால் கறந்ததாம்.

பால்காரர் ஒருவர் மாட்டைச் சோதித்துவிட்டு ‘நல்ல மாடு’ என்று உறுதிப்படுத்தினார். தேவைக்கு மேலுள்ள பாலை பால் சொஸைட்டிக்கு கொடுக்கவும் உடனே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் எல்லாமே கொஞ்ச நாள் தான். சீக்கிரமே மாடு கறக்கும் பாலின் அளவு குறைந்துபோனது. அது கறக்கும் பாலை விட, அதற்குப் போடப்படும் புண்ணாக்கின் விலை அதிகமாக இருந்தது. தாத்தாவிடம் அந்த அளவுக்குச் செலவு செய்வதற்குப் பணமில்லை.

பால் மரத்துவிட்டதால், நல்ல காளை மாட்டை ஏற்பாடு செய்து, பசுமாட்டை சினைப்படுத்த வேண்டி வந்தது. அதற்கும் அதிகப் பணம் வேண்டியிருந்ததால் அம்மாவுக்குத் தெரியாமல் அவளுடைய நகையை அடகுவைத்தார் தாத்தா. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அன்றுமுதல் பசுமாட்டின் ஆரோக்கியம் சீர்குலைந்தது. அதற்கு மருந்து பார்ப்பதற்கு மேலும் சில நகைகள் தேவைப்பட்டன. கடைசியில் ஒன்றும் பலனில்லை. பசுமாட்டை வீட்டுக்கே ஓட்டிவந்துவிட்டார் தாத்தா.

அத்துடன் அவரும் படுத்துவிட்டார். காப்பி குடிக்கும் ஆசையில் பசுமாடு வாங்கப் போய், கைப்பணமும் போய், நகைகளும் போய், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கிடந்தார் தாத்தா.
அடுத்த நாள் காலை அந்தப் பசுமாடு செத்துப்போனதுதான் கதையின் கிளைமேக்ஸ்.

கிராமத்து வாழ்க்கை நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தக் கதை. எளிய மொழியில், நெருடல் இல்லாமல் கதை போகிறது.

கதையின் கடைசி வரியான “இப்போதெல்லாம் தாத்தா காப்பி குடிக்கவே சலித்துக் கொள்கிறார்” என்பதைப் படிக்கும்போது, எளிய மனிதர்களின் எளிய ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை என்ற யதார்த்தம் நம் கண்களைத் தாக்குகிறது.

அமரர் இதயவேந்தனுக்கு எனது அஞ்சலி.

One Comment on “எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் /இராய செல்லப்பா”

Comments are closed.