முச்சங்கம்/க. நா. சு.

சென்னைத் தார் ரோட்டிலே
புல் மேயும்
ஜட்கா வண்டிக் குதிரையது –

மங்கோலியப் புல் வெளியிலே
பல்லாயிரம்
பரிகள் புடைசூழ
பவனிவந்த
தொல்காப்பியம் பேசும்

அரபுப் பாலைவனத்திலே
மனிதன் கைப்படாது
நிமிர்ந்து
திரிந்து வந்த
பெரிய புராணம் சொல்லும்.

தார்த்தாரிய மக்களின்
செல்வமாகப்
பெண்ணுக்கும் மகனுக்கும் மேல்
அருமையாக
வளர்ந்து வந்த
திருக்குறள் ஓதும்,

சென்னைத் தார் ரோட்டிலே
புல் மேயும்
ஜட்கா வண்டிக் குதிரையது.

எல்லையற்ற பெருமைப் பேச்சுக்கும்
பல்லிளிக்கும் சிறுமைக்கும்
இடமாகி விட்ட
தமிழ்ப் பிரபாவம்
காண்மினோ காண்மினோ!