சமைப்பதற்கு முன்னால்…/பாரதிமணி

சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைச் செய்வதிலும் நான் திறமை வாய்ந்தவன். திரையுலகிலும் அதற்கு மவுசு உண்டு. எடிட்டர் லெனின் போல என்னைப் பார்க்க வரும் சிலர் மசால்வடை செய்திருக்கிறீர்களா என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

அம்மா சமைக்கும் போது அவர்களுக்கு உதவி செய்துதான் என் சமையல் கலை வளர்ந்தது. அப்போதெல்லாம் அரைத்துவிட்ட சாம்பார்தான். எனக்கு எதை எப்படி அரைப்பது எவ்வளவு அரைப்பது என்று எல்லாம் அனுபவத்தில் வந்துவிட்டது. என் அம்மாவுக்கு நாக்கு எட்டு முழம். அதே போல் எனக்கும் வளர்த்து விட்டிருக்காங்க. அவங்க யார் ரொம்ப நல்லா
சமைச்சாலும் பெரிசா பாராட்ட மாட்டாங்க. அவங்க கிட்ட நல்லா இருக்குன்னு பேர் வாங்கறது கஷ்டம். ஆனா நான் சமைச்சா மட்டும் ரொம்ப பாராட்டுவாங்க. அதுதான் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன்.

சென்னையில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு திருப்தி இருக்கிறதில்லை. அதனாலே நானே சமைச்சுகிறேன். எங்க அம்மா செய்யாத சமையலைக் கூட பரிசோதனை செய்திருக்கேன். என் குழந்தைகள் அப்பா கூட்டு, அப்பா பொரியல் என்று பேர் சொல்லும் அளவுக்கு அது ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு. 1955-ல் நான் டெல்லிக்கு என் அக்கா வீட்டில் போய் தங்கினேன். அங்கேயும் என் சமையல் தொடர்ந்தது. இது சமையலோட முடியலை. நான் சாப்பிடும் ஊறுகாய் எல்லாம் நானே போடறது. பொதுவா ஒருத்தர் சமைக்கிறது சாயந்தரமே ஊசிப்போயிடும்; ருசி இழந்திடும். ஆனால் நான் செய்றது எல்லாத்துக்குமே ஷெல்ப் லைப் அதிகம். அது கைவாக்கு என்று சொல்வார்களே அதுவாக இருக்கலாம். மத்தவங்க புளி இஞ்சி செஞ்சா ஒரு வாரம் வெச்சுக் கலாம். ஆனா நான் செஞ்சா அது இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப்போயிடாது. சுவை மாறாது.

நன்றி: அந்திமழை

முக நூலில் : ஆர். கந்தசாமி