சதிகள் நிரம்பிய இலக்கிய உலகம்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன்.

ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் அனுபவித்தவன்.

இப்படி இலக்கிய உலகமே விநோதமானது. நான் தீராநதியில் பொறுப்பில் இருந்தபோது ஒரு பேராசிரியர் அடிக்கடி என்னை அவரது பல்கலைக்கழக கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க அழைப்பார். எனக்கு சூதுவாது தெரியாது. எனவே ‘நான் முயற்சி செய்கிறேன்’ என்பேன். ஆனால் ஒரு நிகழ்வில் கூட நான் பங்கேற்றதே இல்லை. ஆனாலும் அவர் விடாப் பிடியாக அழைப்புக் கொடுத்து கொண்டே இருந்தார். நான் பிடிக் கொடுக்கவே இல்லை.

அவரது எழுத்தில் எனக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. தட்டையாக எதையோ எழுதுவார். விமர்சகர் என்ற போர்வையில் சினிமா பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார். அதைப் படித்தால் ரத்தவாந்தி வரும். அந்த அளவு மொழிநடை, கருத்துச் செறிவு பொங்கும். அப்படி ஒரு புலமை நிரம்பி வழியும்.

ஆகவே சட்டை செய்ததில்லை. அவர் ஒரு கட்டத்திற்கு மேல் ‘இவன் மசிய மாட்டான்’ என வெளியேறிவிட்டார். எனக்கு முன்பாக இருந்தவரை இப்படித்தான் காலைக் கழுவினார். அவர் இவர் எழுத்து 100 பக்கம் வந்தாலும் அப்படியே போட்டுவிடுவார். எல்லாம் சுயலாபம். ஆகவே இந்தக் கொடுக்கல் வாங்கல். நான் பயன்பட மாட்டேன் என அறிந்ததும் ஆயிரம் கிமீட்டர் போய் விட்டார் பேராசிரியர்.

அதேபோல ஒரு சர்வதேச எழுத்தாளர். அவரது எழுத்து மீது அலாதியான அன்பு கொண்டவன் நான். உண்மையில் தரமானஎழுத்தாளர். மிகப் பெரிய மதிப்புள்ள அவரை நானே தேடிப் போய் எழுத சொன்னேன். அவரும் எழுதினார். பின்னர் ஒருநாள் ‘ உங்களுடைய பிறந்தநாள் எப்போது’ என்றார். நான் பிறந்து வளர்ந்த நாள் முதல் அப்படி ஒருநாளை வீட்டில் யாரும் கொண்டாடியதே இல்லை. அவரிடம் விளக்கினேன். அவர் இருக்கட்டும் சும்மா சொல்லுங்கள் என்றார். சொன்னேன். பொறுப்பில் இருந்தவரை மெயிலில் வாழ்த்து வந்தது. அதன் பின்னால் எத்தனையோ பிறந்தநாள் வந்துவிட்டது. மெயில்தான் வருவதே இல்லை.

இன்னொருவர் அறம், நீதி என காத்திரமாக செயல்பாடு கொண்டவர்.நான் எடுத்த நேர்காணல் ஒன்றை நூலாக வெளியிட்டார். அந்த விழாவிக்கு சென்று வந்தவர் அரசியல் தலைவர் எனக்கு போன் செய்து, ‘ கடற்கரய் என்னம்மா பேட்டி எடுத்திருக்கீங்க. அற்புதமான நூல். ஆனால் நீங்கள் விழாவுக்கு வந்திருக்க வேண்டும்’ என்றார்.

எனக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. என்ன நூல்? யார் பதிப்பகம்? எனக் கேட்டேன். சொன்னார். அந்தப் பதிப்பகம் எனக்கு சொல்லவே இல்லை. அதுவே அவர்களின் முதல் வெளியீடு. நான் அவரை அழைத்து கேட்டேன். அலுவலகம் வந்தார். தவறுதான் இனி வெளியிட மாட்டேன் என எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தார்.

‘ஒரு பத்திரிகையாளராக உங்கள் பணி சிறப்பானது. உங்களுக்கு நிகர் யாரும் இல்லை’ என்றார் அந்த நீதிமான்.

ஆனால் அவரது பதிப்பகம் வளர்ந்தது. அவரும் பெரும் பிரபலமானார். அதன் பின்னால் சிறந்த பத்திரிகையாளருக்கு விருது கொடுத்தார். ஆனால் , எனது நூல் , சேவை எதுவும் ஞாபகத்திற்கு அவருக்கு வரவில்லை.

இப்படி ஒருநூறு கத்திக் குத்துகளை கண்டிருக்கிறேன். ஆனாலும் இன்று எந்தச் சதி வேலைகளும் செய்ய கற்காமல் வேலையை மட்டுமே செய்து வருகிறேன் என்பது எனக்கு நானே பெருமை கொள்ளும் விஷயம். வேறு என்ன சொல்ல?