ஸ்வாமி சித்பவானந்தர்../கண்ணன் கிருஷ்ணன்

இன்று ஆங்கில தேதி படி ஸ்வாமி சித்பவானந்தர் மஹா சமாதி அடைந்த 35 வது வருட நினைவு நாள்.
நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
என் தந்தை ராமகிருஷ்ண விஜயம் மற்றும் தர்மசக்கரம் என்ற இரு இதழ்களுக்கும் சந்தாதாரர். மேலும் என் தந்தை நிர்வகித்து வந்த காந்தி ஆசிரமம் காதி பண்டார் கிளை மூலம் ஸ்வாமிகளின் நூலகளும் விற்பனை ஆகும்.
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் எந்த சிறப்பு நிகழ்வின் போதும் என் தந்தை கடையிலிருந்து ஸ்ரீ ஸ்வாமிகளின் நூல்களை எடுத்துச் சென்று அங்கே விற்பனை செய்வதுண்டு. அந்த விற்பனையை நானும் என் அண்ணனும், தமக்கையும் ஆர்வத்தோடு செய்வோம். அப்போது ஸ்வாமிகளின் பல கையடக்க நூல்களைப் படித்து சனாதன தர்மச் செய்திகளையும், ஸ்ரீ ராமகிருஷ்ண்ர் விவெகானந்த நூல்களையும் பயின்றதுண்டு.
என் தந்தைக்கு ஸ்வாமிகளுடன் அதிகப் பழக்கம் உண்டு. ஆகவே ஸ்வாமிகளைப்பற்றி அடிக்கடி செய்திகள் கூறுவார். அவற்றில் சிலவற்றைப் பகிர்கிறேன்.
திருப்பராய்த்துறை தபோவனத்தில் ஸ்வாமிகளின் அறைக்கு உள் தாழ்ப்பாள் இருக்காது. ஒரு துறவிக்கு ரகசியம் என்று ஏதும் கிடையாது. எனவே கதவை உள்தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள வேண்டியதில்லை என்று ஸ்வாமிகள் சொல்வாராம்.
நான் சிறுவனாக ஸ்வாமிகளைப் பார்க்கும் போது அவருக்கென்றே ஒரு பாணியில் அழகாக நேர்த்தி செய்யப் பட்ட ஒரு குறுந்தாடி இருக்கும். ஒருமுறை பார்க்கும் போது அந்தத் தாடி நேர்த்தி செய்யப் படாமல் இருந்தது. என் தந்தை ஸ்வாமிகளிடம் ஏன் தாடியை நேர்த்தி செய்யவில்லை எனக் கேட்டார். அப்போது ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே. தினந்தோறும் அதை நேர்த்தி செய்து பழக்கப் பட்டதால் ஒரு நாள் நேர்த்தி செய்யாவிட்டாலும் அன்று ஏதொ குறைவு பட்டது போன்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது. ஒரு துறவி இது போல் ஒரு பழக்கத்திற்கு தன் மனம் அடிமைப்படுவதை அனுமதிக்கலாகாது . எனவே இனி தாடியை நேர்த்தி செய்வதில்லை என முடிவு செய்தேன் என்றார்.
இதே போல இன்னொரு சம்பவம் ஸ்வாமிகள் பகிர்ந்து கொண்டதை என் தந்தை நினைவு கூர்வார். ஒரு துறவி என்ற முறையிலே ஸ்வாமிகள் சைவ உணவுப் பழக்கம் உடையவர். ஒரு முறை ஒரு மேல்நாட்டு அன்பருடன் உணவு அருந்த நேர்ந்தது. அப்போது அந்த அன்பருக்கு அசைவ உணவும், ஸ்வாமிகளுக்கு சைவ உணவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அருகருகே அமர்ந்து உணவு சாப்பிட நேர்ந்தது. அந்த அன்பர் ஏதோ ஒரு அசைவ உணவைச் சுவைத்த உடன், அதன் சிறப்பான சுவையில் மயங்கி, ஸ்வாமிகள் சைவ உணவுக்காரர் என்பதை மறந்து, அந்த உணவில் ஒரு சிறிதை ஸ்வாமிகளை சுவைக்கக் கொடுத்தாராம். அந்த அன்பரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த உணவின் ஒரு மிகச்சிறு துளியை ஸ்வாமிகள் சுவைக்க நேர்ந்தது. அந்த நொடியில் அங்கே அந்த அன்பரின் அன்பே முன்னிலை வகித்தது.
என் உடன் பணியாற்றிய அமரர் ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி தபோவனத்தில் தங்கியிருக்கும் வாய்ப்பு பெற்றவர். அவர் ஸ்வாமிகள் மாணவர்களுடன் விளையாட்டுத் திடலில் அவர்களில் ஒருவராகவே விளையட்டு உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவதைச் சொல்வார். நாள் முழுவதும் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்து கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்குவாராம். அந்த ஒரு மணி நேரத்தில் மாணவர்கள் அவரிடம் எல்லா உரிமைகளையும் எடுத்துக் கொள்வராம். அப்போது எந்த மாணவரும் தவறாக நடந்து கொண்டாலும் அப்போது அந்த மாணவரை தண்டிக்காமல் பின்னர் அந்த மாணவரைத் தனியாக ஆலோசனைகள் சொல்லி அவர் செய்த தவற்றை விளக்கி அந்த மாணவரை நல்வழிப் படுத்துவாராம்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஸ்வாமிகள் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் தன் பகவத் கீதை புத்தகத்தை 13 அணா (ஓரு ரூபாய்க்கும் குறைவு) விலை வைத்து விற்றது ஒரு பெரிய ஆச்சரியம். தமிழ் நாட்டில் பகவத் கீதையையும் சமஸ்கிருத மொழியையும் எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்ற மகத்தான சேவை, ஸ்வாமிகளின் பலப் பல நற்பணிகளில் மகுடமாக இன்று வரை இருந்து வருகிறது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராமகிருஷ்ணாய!